2025 ஜூலை 12, சனிக்கிழமை

இராணுவ பிரசன்னம் அச்சத்தை தோற்றுவித்துள்ளது: ஆஸி அதிகாரியிடம் எடுத்துரைப்பு

Kogilavani   / 2012 நவம்பர் 17 , மு.ப. 10:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                            (ரி.லோஹித்)
'தமிழ் மக்களுக்கு முழுமையான பாதுகாப்போ அல்லது அதற்கான உத்தரவாதமோ இன்னும் கிடைக்கவில்லை. அச்ச பீதியும் பொருளாதார பற்றாக்குறையுமே அவர்களை சூழ்கொண்டுள்ளது. அதுமட்டுமல்லாது இராணுவப் பிரசன்னம் குறைவடையாமலிருப்பதும் எவ்வேளையிலும் தங்கள் குடும்பங்களுக்கு ஏதாவது நடந்துவிடுமோ என்ற அச்சத்தின் காரணத்தாலும் இவ்வாறான உயிருக்கு உத்தரவாதமற்ற பயணங்களை மக்கள் மேற்கொள்கின்றார்கள்' என்று மட்டக்களப்பு மாவட்ட அரசசார்பற்ற நிறுவனங்களின் ஒன்றியம் இணையத்தின் தலைவர் லயன் கலாநிதி அ.செல்வேந்திரன் தெரிவித்தார்.

அவுஸ்திரேலியா நாட்டின் குடிவரவு குடியகல்வு இலாகாவிற்குப் பொறுப்பான அதிகாரி சட்டத்தரணி எமிலி ஹய்விக்கும் மட்டக்களப்பு மாவட்ட அரசசார்பற்ற நிறுவனங்களின் ஒன்றியம் இணையத்தின் தலைவர் லயன் கலாநிதி அ.செல்வேந்திரனுக்குமிடையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்,

அவுஸ்திரேலியா நாட்டின் குடிவரவு குடியகல்வு இலாகாவிற்குப் பொறுப்பான அதிகாரி சட்டத்தரணி எமிலி ஹய் மட்டக்களப்புக்கு அண்மையில் உத்தியோக பூர்வமாக விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.

இருவருக்கும் இடையிலான இந்த சந்திப்பின் போது அவுஸ்திரேலிய நாட்டிற்கு அதிகமான மக்கள் அதிகாரமற்ற முறையிலும் பாதுகாப்பற்ற முறையிலும் தஞ்சம் கோரி பயணம் செய்வது பற்றியும்  இவ்வாறான இடப்பெயர்வுகள் யுத்தம் முடிவுற்ற நிலையிலும் இடம்பெறுவதற்கான காரணங்களை கேட்டறிந்தார்.

இதன்போதே மட்டக்களப்பு மாவட்ட அரசசார்பற்ற நிறுவனங்களின் ஒன்றியத்தின்; இணையத்தின் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

தமிழ் மக்களைப் பொறுத்தமட்டில் அவர்களுக்கு இன்னும் முழுமையான பாதுகாப்போ அல்லது உத்தரவாதமோ கிடைக்கவில்லை என்ற பீதியும் பொருளாதாரப் பற்றாக்குறையுமே மிகப்பிரதான காரணமாக அவர்களிடத்தில் இருக்கின்றது. 

அதுமட்டுமல்லாது இராணுவப் பிரசன்னம் குறைவடையாமலிருப்பதும் எவ்வேளையிலும் வீதிரோந்துகள் இரவு பகலாக இருப்பதும் மீண்டும் தங்கள் குடும்பங்களுக்கு எதுவும் நடந்துவிடுமோ என்ற அச்சத்தின் காரணத்தாலும் இவ்வாறான உயிருக்கு உத்தரவாதமற்ற பயணங்களை மக்கள் மேற்கொள்கின்றார்கள்.

இவ்வரசாங்கம் தமிழ் மக்கள் மீது காட்டும் கரிசனை மாற்றான் தாய் மனப்பாங்கை ஒத்ததாக உள்ளதாக மக்கள் உணர்கின்றனர் அரசியல் ரீதியான தீர்வுகளும் தாமதமாகி இழுபறிநிலையில் தொடர்ந்தும் உள்ளதால் மக்கள் விரக்தியுற்று இவ்வாறான பயணங்களை மேற்கொள்கின்றனர். 

எனவே அவுஸ்திரேலிய அரசாங்கம் இம்மக்களின் துர்ப்பாக்கிய நிலையையுணர்ந்து அவர்களை நாடுகடத்தாது தங்கள் நாட்டிற்குள் அகதி அந்தஸ்தாவது வழங்கி பராமரிக்க ஏற்பாடுகளை மேற்கொள்ளவேண்டும் அல்லது புதிய நடைமுறைகளை அமுல்படுத்த முன்வரவேண்டும். 

குறிப்பாக சட்டரீதியான பயணங்களை மேற்கொள்வதற்கும் அரசியல் தஞ்சம் வழங்குவதற்கும் ஆவனசெய்யவேண்டும். அல்லது அமெரிக்க நாடு கிறீன் அட்டை விநியோகத்தின்மூலம் மக்களை உள்வாங்குவது போன்று சட்டரீதியாக ஏதாவது செய்து இவ் அப்பாவி மக்களை ஏற்றுக்கொள்ளுதல் வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டேன்.

இதற்குப் பதிலளித்த அதிகாரியான சட்டத்தரணி எமிலி, தனது நாட்டு அரசாங்கத்திற்கு இக்கோரிக்கையை சமர்ப்பிப்பதாகவும் இவ்வாறு பாதுகாப்பான வழிமுறைகளை கையாளுவதனூடாக அப்பாவி மக்களுக்கு உதவிகள் செய்வதற்கு இவ்யோசனை பொருத்தமானதாக தான் உணர்வதாகவும் தெரிவித்ததாக அவர் சொன்னார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .