2020 ஒக்டோபர் 21, புதன்கிழமை

கிழக்கில் முறையற்ற ஆசிரியர் இடமாற்றங்கள் தொடர்பாக ஆளுநருக்கு கண்டன அறிக்கை

A.P.Mathan   / 2013 ஜூலை 20 , மு.ப. 08:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.ரி.சகாதேவராஜா
 
கிழக்கு மாகாண கல்வியமைச்சின் தீர்மானத்திற்கிணங்க கடந்த 01.07.2013 முதல் டிசெம்பர் வரை சகல ஆசிரியர்களது இடமாற்றங்களும் இடைநிறுத்தப்பட்டுள்ளன என அறிவிக்கப்பட்டுள்ளபோதிலும் சிலசில வலயங்களில் ஆசிரிய இடமாற்றங்கள் நடைபெற்றுவருவது குறித்து கிழக்கு மாகாண ஆளுநருக்கு இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் கண்டன அறிக்கையை அனுப்பவுள்ளது.
 
உடனடியாக இப்பழிவாங்கல் இடமாற்றங்கள் நிறுத்தப்படுவதுடன் குறிப்பிட்ட காலப்பகுதியினுள் செய்யப்பட்ட இடமாற்றங்களை ரத்துச்செய்ய வேண்டும் எனவும் கேட்டுள்ளது.
 
வலயக் கல்விப் பணிப்பாளர்கள் அடங்கிய கூட்டமொன்றில் கிழக்கு மாகாண கல்வியமைச்சின் செயலாளர் புஸ்பகுமார இத்தீர்மானத்தை எடுத்து, கல்வியமைச்சிலும் மாகாண கல்விப் பணிமனையிலும் அறிவித்தல் பலகையிலும் காட்சிப்படுத்தியுள்ளார். இதனால் இடமாற்றம் கோரிப் போகும் ஆசிரியர்கள் இவ்வறிவித்தலைப் பார்த்தபடி ஏமாற்றத்துடன் திரும்பவேண்டியேற்படுகிறது.
 
இதே உத்தரவை காட்சிப்படுத்திவிட்டு, ஆசிரியர்களை இடமாற்றும் சம்பவம் பட்டிருப்பு வலயத்திலும் சம்மாந்துறை வலயத்திலும் இடம்பெற்றுள்ளதாக சங்கத்திற்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது.
 
பட்டிருப்புவலயத்தில் இரு ஆசிரியைகளை இடமாற்றியுள்ளார்கள். அதுவும் 04.07.2013 இல் இவ்விடமாற்றம் இடம்பெற்றுள்ளது. அதாவது, இடமாற்றம் இடைநிறுத்தப்பட்டுள்ள காலத்தில் இவ்விடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. இடமாற்றப்பட்ட ஆசிரியை ஒருவருக்கு வயது 57. ஆசிரியர்களை இப்படி தனிப்பட்ட பழிவாங்கலுக்காக இடமாற்றம் செய்யலாமா? என்ன காரணத்திற்காக இடமாற்றம் செய்யப்பட்டார்கள்? என்பதைக் குறிப்பிடவில்லை.
 
சம்மாந்துறை வலயத்தில் பின்தங்கிய அதேவேளை ஆசிரியர் தட்டுப்பாடு நிலவும் புதுநகர் அ.த.க. பாடசாலையிலிருந்து இரு ஆசிரியர்கள் பதிலாளின்றி இடமாற்றப்பட்டுள்ளனர். இதுவும் இக்காலகட்டத்தினுள் அரங்கேறியுள்ளது. அந்த அப்பாவி மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதையிட்டு சம்பந்தப்பட்டோர் கவனத்திற்கொள்ளாதது ஏன்? 300 ஆசிரியர்கள் மேலதிகம் என்று கூறப்படும் கல்முனை வலயத்திற்கு ஒருவர் மாற்றப்பட்டுள்ளதாக அறிகிறோம். இது நீதியா? நியாயமா? இப்படிஇன்னும் சில வலயங்களிலும் இடமாற்றங்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிகிறது. எனின் எதற்காக இடமாற்றம் இடைநிறுத்தம் என்ற அறிவித்தல்? அப்பாவி ஆசிரியர்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டுக்கொண்டே வருகின்றனர்.
 
கல்வியமைச்சின் சட்டதிட்டங்களை மதித்து கடந்த காலங்களில் தூர இடங்களுக்கு இடமாற்றலாகிச் சென்றவர்கள் இன்றும் கஸ்டத்தை துன்பத்தை அனுபவித்துக்கொண்டிருக்கிறார்கள். சட்டத்தை மதித்தவர்களுக்கு தண்டனை. ஆனால் சட்டத்தை மதியாமல் அரசியல் போன்ற இன்னோரன்ன காரணங்களால் இடமாற்றத்தை ரத்துச்செய்து அதே இடங்களில் இருக்கும் ஆசிரியர்கள் தொடர்ந்து இன்பம் அனுபவிக்கிறார்கள். இது அவர்களுக்கு வெகுமதி. இது நீதியா? நியாயமா?
 
எனவே இவைகள் ரத்துச் செய்யப்படவேண்டும். ஆசிரியர் இடமாற்றசபைகளின் முக்கியத்துவம் எந்தளவில் பேணப்படுகிறது என்பது இதிலிருந்து தெளிவாகிறது. இந்நிலை நீடித்தால் சகல இடமாற்ற சபைகளிலிருந்தும் வெளியேறவேண்டியேற்படும் என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கின்றோம் என அக்கண்டன அறிக்கையில் சுட்டிக்காட்டப் பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X