2020 ஒக்டோபர் 30, வெள்ளிக்கிழமை

பேரணியில் கலந்துகொள்ளக்கூடாது என இராணுவம் அச்சுறுத்தல்: செல்வராசா

Super User   / 2013 ஓகஸ்ட் 04 , மு.ப. 07:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.பாக்கியநாதன், எம்.எஸ்.எம். நூர்தீன், வடிவேல் சக்திவேல்

குருக்கள் மடம் பிரசேத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற பேரணியில் கலந்துகொள்ளக்கூடாது என பொதுமக்களை இராணுவத்தினர் அச்சுறுத்தியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசா குற்றஞ்சாட்டினார்.

மாங்காடு மற்றும் குருக்கள்மடம் ஆகிய பிரதேசங்களிலுள்ள வீடுகளுக்குச் சென்று பேரணியில் கலந்து கொள்ளக்கூடாது என இராணுவத்தினர் அச்சுறுத்தியுள்ளனர் எனவும் அவர் தெரிவித்தார்.

இதனையும் மீறிச் சென்றால் கடந்த வாரம் கம்பஹாவில் நடைபெற்ற நிகழ்வு நடைபெறும் என இராணுவம் தெரிவித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டார்.

கோவில்கள் உடைக்கப்பட்டமை,கோவில் உடைமைகள் கொள்ளையிடப்பட்டமை ஆகியன தொடர்பில் இதுவரை எந்தவித சட்ட நடவடிக்கை எடுக்கப்படாததை கண்டித்து இன்று  குருக்கள் மடத்தில் கவனயீர்ப்பு பேரணி இடம்பெற்றது. இதன் பின்னர் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர்,

"தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எப்போதும் எடுத்த காரியத்தை எந்தவிதமான சவால்களுக்கும் மத்தியில் நடத்தியே முடிக்கும். மக்களின் பிரதிநிதியாகிய நாங்கள் மக்களின் நலன்களில் கண்ணும் கருத்துமாக இருப்போம். அச்சுறுத்தல் காரணமாக இந்த பேரணியில் பங்குகொள்ளவிருந்த அதிகமானோர் கலந்துகொள்ளவில்லை. இருந்தும் இங்குள்ள மக்களை வைத்து பேரணியை நடத்தியுள்ளோம். இது எமக்கு வெற்றியே.

நாம் அரசுக்கோ அல்லது பொலிஸாருக்கோ எதிராக இந்த பேரணியை நடத்தவில்லை. களவு செய்தவர்களைக் கண்டு பிடித்து சட்டத்தின் முன் நிறுத்துங்கள் என்று தான் இந்த அமைதிப் பேரணியை பொலிஸாரின் அனுமதியுடன் நடத்த திட்டமிட்டிருந்தோம்.

இவைகளைப் பார்க்கும் போது, இராணுவத்தினர் தானா இந்த களவுகளைச் செய்தார்கள் எனத் தோன்றுகின்றது. போர் முடிந்து சிவில் நிர்வாகம் நடைபெறுகின்றது என அரசு கூறிக்கொண்டு இங்கே இராணுவ ஆட்சி நடாத்துகின்றது" என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .