2020 ஒக்டோபர் 30, வெள்ளிக்கிழமை

கடதாசி ஆலையில் வாகனங்கள் இரண்டு பறிமுதல்

A.P.Mathan   / 2014 ஏப்ரல் 10 , பி.ப. 03:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எம்.அனாம்

வாழைச்சேனை கடதாசி ஆலையில் கடமை புரிந்து ஓய்வு பெற்றதன் பின்னர் பணிக்கொடை கிடைக்காதவருக்கு, கடதாசி ஆலையின் சொத்துக்களை விற்று அவருக்கான பணிக்கொடையை வழங்கமாறு கிடைத்த நீதிமன்ற உத்தரவின் பேரில், இன்று (10.04.2014) வாழைச்சேனை கடதாசி ஆலையில் இருந்து உழவு இயந்திரம் ஒன்றும் அம்புலன்ஸ் வண்டியொன்றும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

வாழைச்சேனை கடதாசி ஆலையில் கடமைபுரிந்து தங்களுக்கான பணிக்கொடை கிடைக்கவில்லை என்று மட்டக்களப்பு தொழில் திணைக்களத்தில் 48 பேர் செய்த முறைப்பாட்டையடுத்து, தொழில் திணைக்களத்தினால் வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழங்கின் அடிப்படையில், ஓர் ஊழியருக்கான பணிக்கொடை தொகையான ஐந்து லட்சத்தி நாற்பத்திரெண்டாயிரம் ரூபாவினை செலுத்துமாறு அறிவித்திருந்தும் அத்தொகை செலுத்தப்படாததால் இன்று இரண்டு வாகனங்கள் நீதிமன்றத்தால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இன்றில் இருந்து பதினைந்து தினங்களுக்குள் குறித்த பணத்தினை வாழைச்சேனை கடதாசி ஆலை நிர்வாகம், நீதிமன்றத்தில் செலுத்தி வாகனங்களை மீளப் பெற்றுக்கொள்ள முடியும். இல்லையேல் வாகனங்கள் ஏலத்தில் விடப்பட்டு குறித்த நபரின் பணிக்கொடை நிதி செலுத்தப்படும் என்று தொழில் திணைக்களத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதேவேளை, கடந்த ஐந்து மாதங்களாக வாழைச்சேனைக் கடதாசி ஆலையில் கடமை புரியும் ஊழியர்களில் குறிப்பிட்ட ஒரு தொழில் சங்கத்தைச் சேர்ந்த சிலருக்கு மாத்திரம் சம்பளம் வழங்கப்படுவதற்கான நடவடிக்கைகள் நிர்வாகத்தினரால் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், தொழில் சங்கங்களின் உறுப்பினர்களுக்கிடையில் நேற்று (புதன்கிழமை) ஏற்பட்ட கைகலப்பில் இரண்டு பேர் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவ்விடயங்கள் தொடர்பில் இன்று செய்தி சேகரிக்கச் சென்ற பிரதேச செய்தியாளரை, கடதாசி ஆலைக்குள் உட்பிரவேசிப்பதற்கு ஆலையின் நிர்வாகத்தினரால் அனுமதி வழங்கப்படவில்லை. செய்தி சேகரிக்க வேண்டும் என்றால் அரச வளங்கள் மற்றும் மனிதவள அபிவிருத்தி அமைச்சில் அனுமதி பெற்று வருமாறு கடமையில் இருந்த ஆலையின் பாதுகாப்பு அதிகாரிகளால் தெரிவித்து, உட்செல்வதற்கான அனுமதி மறுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--