2020 ஒக்டோபர் 30, வெள்ளிக்கிழமை

வறிய மக்களுக்கு கோழிக்குஞ்சுகள் வழங்கும் நிகழ்வு

Kanagaraj   / 2014 ஏப்ரல் 23 , மு.ப. 08:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல்-சக்திவேல்

சுயதொழிலை மேற்கொள்வதன் ஊடாக குடும்பத்தின் பொருளாதாரத்தை உயர்த்தி நிம்மதியாக வாழ வேண்டுமென கிழக்கு மாகாண விவசாய கால்நடை உற்பத்தி, கைத்தொழில் அபிவிருத்தி,மீன்பிடி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்துள்ளார்.

ஏறாவூரில் வறிய மக்களின் சுயதொழிலை மேற்கொள்ளும் வகையில் அந்தப் பிரதேசத்தில் உள்ளவர்களுக்கு கோழிக்குஞ்சுகள் வழங்கும் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ஏறாவூர் பிரதேசத்தில் உள்ள மிருக வைத்தியசாலையில் திங்கட்கிழமை(21) நடைபெற்ற நடைபெற்ற இந்த வைபவத்தில் ஏறாவூர் பிரதேச கால்நடை வைத்தியர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது எறாவூர் பிரதேசத்திலுள்ள 200 பயனாளிகளுக்கு 5000 கோழிக்குஞ்சுகள் பகிர்ந்தளிக்கப் பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
 
இந்நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர்:

அரசாங்க தொழிலை நம்பியிருந்த காலம் எப்போதோ மாறிவிட்டது. அரசாங்கம், தனியார் துறைகளில் தொழில் புரிவோர் தமது குடும்பத்தின்  பொருளாதாரத்தை சீராக கொண்டு செல்ல முடியாததால் பாரிய சவால்களை எதிர்நோக்குகின்றனர்.

இன்று தொழில் இல்லாத பிரச்சனை இந்நாட்டில் தோன்றியுள்ளது. படித்த இளைஞர் யுவதிகள் தமது படிப்புக்கு ஏற்ற தொழிலை தேடுவதிலேயே காலத்தை கடத்துவதானால் அவர்களது சக்தி வீணாகின்றது.
 
எனவே சுயதொழில் வாய்ப்புக்களில் அதிக நன்மையும் வருமானமும் பெற முடியும், குடும்பத்தின் பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டால் வீட்டில் மகிழ்ச்சி ஏற்படும். பிள்ளைகளை ஒழுங்காக வளர்க்கலாம் அவர்களை படிப்பித்து ஆளாக்கவும் முடியும்.
சண்டை சச்சரவுகளும் இருக்காது, எனவே தான் அரசாங்கம் சுயதொழில் வாய்ப்புக்களை ஊக்குவிப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மானிய அடிப்படையிலும் இலவசமாகவும் சுயதொழிலுக்கு தேவையான மூலவளங்களை வழங்கி வருகின்றது.
 
இந்த அடிப்படையில் எமது அமைச்சின் கீழ் கிழக்கு மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தி அவர்களுக்கு விமோசனம் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. உங்களுக்கு வழங்கப்பட்டுள்ள கோழிக்குஞ்சுகளை நீங்கள் முறையாக உரிய முறையில் வளர்த்து பராமரித்தால் பெருமளவு நன்மை அடையலாம். அதன் மூலம் உங்கள் பிரதேசத்தில் வாழும் மக்களும் இதன் பயனை அனுபவிக்க முடியும்.
 
கோழிகளையும் முட்டைகளையும் மலிவான விலையில் கொள்வனவு செய்வதற்கு இந்த பிரதேச மக்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். குடும்பத் தலைவிகளாக உள்ள நீங்கள் இந்த விடயத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். இது ஒரு கடினமான தொழில் அல்ல என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--