2021 ஜனவரி 26, செவ்வாய்க்கிழமை

மது பாவனையை ஒழிக்கக் கோரி மகஜர் கையளிப்பு

Suganthini Ratnam   / 2014 ஜூலை 02 , மு.ப. 08:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் மாதமொன்றுக்கு 41 கோடி 36 இலட்சத்து 99 ஆயிரத்து 680 ரூபா (413,699,680) மதுவுக்கு  செலவு செய்யப்படுவதாக மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவு மகளிர் அமைப்புக்களின் சம்மேளனம் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த நிலையில், மட்டக்களப்பில் தாண்டவமாடும் மதுப்பாவனையை ஒழிக்குமாறு கோரி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸிடம் மேற்படி சம்மேளனம் மகஜர் கையளித்துள்ளதாக மண்முனை வடக்கு மகளிர் கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவி மனோகர் செல்வி தெரிவித்தார்.

அந்த மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

'கடந்தகால யுத்தம் மற்றும் சுனாமி போன்ற இயற்கை அனர்த்தங்களால் மட்டக்களப்பு மாவட்டம் மோசமாக பாதிக்கப்பட்டுப் போயுள்ள நிலையில், தற்போது மதுப்பாவனையும் மட்டக்களப்புக்கு ஒரு கேடாக அமைந்துள்ளது.

வறுமை, புற்றுநோய், மதுப்பாவனை ஆகியவற்றில் எமது மட்டக்களப்பு மாவட்டமே முன்னிலையில் உள்ளது.

வர்த்தமானி அறிவுறுத்தலுக்கு அமைய, கிழக்கு மாகாணத்தில் மொத்தம் 84 மதுச்சாலைகளே இருக்க முடியும். ஆயினும், மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரம் 60 மதுச்சாலைகள் உள்ளன. அதிலும் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில்  29 மதுச்சாலைகள் உள்ளன.

இவை பாடசாலைகள், மத ஸ்தலங்கள், பிரதான வீதிகள், மக்கள் கூடும் இடங்கள் என்பவற்றிற்கு பக்கத்தில் திறக்கப்பட்டுள்ளன.  பாடசாலை மாணவர்களும் பெண்களும் இத்தகைய மதுச்சாலைகளால் பெரிதும் உபத்திரவத்துக்கு  உள்ளாகின்றார்கள்.

எனவே, அரசாங்க வர்த்தமானி அறிவுறுத்தலுக்கு அமைய மட்டக்களப்பில் மதுபானச்சாலைகளின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும்.
பாடசாலைகள், மத ஸ்தலங்கள், பிரதான வீதிகள், மக்கள் கூடும் இடங்கள் என்பனவற்றிற்கு பக்கத்தில் திறக்கப்பட்டுள்ள மதுச்சாலைகளை அகற்ற வேண்டும்.

இலங்கையில் தயாரிக்கப்படும் அதிக செறிவுள்ள உடல் நலத்திற்குத் தீங்கு விளைவிக்கும் மதுபானங்கள் மட்டக்களப்பில் விற்பனையாவதைத் தடை செய்ய வேண்டும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .