2021 பெப்ரவரி 28, ஞாயிற்றுக்கிழமை

கணவரை அழைத்துச்சென்ற சைக்கிள் இருந்தது கணவர் இல்லை

Administrator   / 2015 ஓகஸ்ட் 24 , மு.ப. 09:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

-வா.கிருஸ்ணா

இராணுவத்தினரே எனது கணவரை அழைத்துச் சென்றனர். அவர்களைத் தவிர எனது கணவரை யாரும் கூட்டிச்செல்லவில்லை என குருமண்வெளியை சேர்ந்த சூரியகுமார் ரதிதேவி தெரிவித்தார்.

களுவாஞ்சிகுடி பிரதேச செயலக மண்டபத்தில் சனிக்கிழமை (22) காலை நடைபெற்ற காணாமல் போனவர்களை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகளின் போது சாட்சியமளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

எனது கணவர் சூரியகுமார், கடந்த 2008-12-08ஆம் திகதி இரவு 9 மணிக்கு எங்களது வீட்டுக்கு சீருடையில் வந்த இராணுவத்தினரால் அழைத்தச் செல்லப்பட்டார்.

விசாரணை செய்துவிட்டு விடுகின்றோம் என்று கூட்டிச்சென்றனர். இராணுவத்தினரை தவிர வேறு யாரும் வரவில்லை.

நானும் எனது கணவருடன் செல்ல முற்பட்டபோது என்னை அடித்துவிரட்டி காலையில் முகாமுக்கு வருமாறு கூறிச்சென்றனர்.

காலையில் இராணுவ முகாமுக்கு சென்றபோது நாங்கள் பிடித்துவரவில்லை. பொலிஸ் நிலையத்துக்கு சென்று முறையிடுங்கள் என்று கூறினர்.

நான் படைமுகாமுக்கு சென்றபோது, எனது கணவரை கொண்டுசென்ற மோட்டார் சைக்கிள் அங்கு இருப்பதைக் கண்டேன். அங்கு இந்த சைக்கிளில்தான் எனது கணவரை கொண்டு சென்றார்கள் என்று கூறியபோது சைக்கிளில் இருந்த இலக்கத்தகடுகளை கழட்டிவிட்டனர்.

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசாரணையின்போதும் இதனையே தெரிவித்தேன்.

நாங்கள் வயல்செய்து அதில் வரும் வருமானத்தைக் கொண்டே வாழ்ந்து வந்தோம். எனது கணவர் எந்த அமைப்புடனும் தொடர்புகொண்டவர் அல்ல.

நான்கு பிள்ளைகள் உள்ளனர். அவர்களை வளர்ப்பதில் நான் பெரும் கஷ்டங்களை எதிர்நோக்கி வருகின்றேன்.

எனது கணவரின் நிலை என்ன என்பது தொடர்பில் உரியவர்கள் எனக்கு தெரியப்படுத்த வேண்டும்' எனக் கோரினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .