2021 ஜனவரி 19, செவ்வாய்க்கிழமை

சீரற்ற காலநிலையால் மட்டக்களப்பில் 3864 வீடுகள் சேதம்

Menaka Mookandi   / 2012 டிசெம்பர் 24 , மு.ப. 10:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ரி.லோஹித்)

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து சீரற்ற கால நிலை நிலவிவரும் நிலையில் இந்த அனர்த்தங்கள் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரையில் 3864 வீடுகள் சேதமடைந்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்தது.

இவற்றில் 1246 வீடுகள் முழுமையான சேதமடைந்துள்ளதுடன் 2618 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய பணிப்பாளர் எஸ்.இன்பராசா தெரிவித்தார்.

அதிகளவான வீடுகள் ஏறாவூர்ப்பற்று மற்றும கிராண் பிரதேச செயலாளர் பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளிலேயே சேதமடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து மழைபெய்துவரும் நிலையில் 191 கிராம சேவையாளர் பிரிவுகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் இவற்றில் உள்ள 42714 குடும்பங்களை சேர்ந்த 158,892பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பணிப்பாளர் இன்பராசா தெரிவித்தார்.

அத்துடன் இந்த அனர்த்தங்களின்போது இதுவரையில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதுடன் இரண்டுபேர் காணாமல்போயுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அத்துடன் அனர்த்தத்தின்போது இடம்பெயர்ந்த மக்கள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் 13 இடைத்தங்கல் முகாம்களில் 609 குடும்பங்களை சேர்ந்த 2226பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலைய பணிப்பாளர் தெரிவித்தார்.

உறவினர் நண்பர்களின் வீடுகளில் 12599 குடும்பங்களை சேர்ந்த 45657 பேர் தங்கியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். இதேநேரம் மட்டக்களப்பு மாவட்டத்தில் மீண்டும் மழைபெய்துவரும் நிலை காரணமாக மாவட்டத்தின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.

எனினும் போக்குவரத்துக்கள் தங்கு தடையின் நடந்துவரும் நிலையில் ஆற்றுவாயில் நீரோட்டம் காரணமாக நீர்மட்டம் குறைந்துவருகின்றது. இதேநேரம் வாகரை பிரதேசத்துக்குட்பட்ட போக்குவரத்துக்கள் பணிச்சங்கேணி பாலம் உடைந்துள்ளதன் காரணமாக இயந்திரப்படகு சேவை மூலம் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .