2021 ஜனவரி 17, ஞாயிற்றுக்கிழமை

கொக்கட்டிச்சோலை மாவீரர் தின தடையுத்தரவு வழக்கு ஒத்திவைப்பு

Princiya Dixci   / 2020 நவம்பர் 25 , பி.ப. 12:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு - கொக்கட்டிச்சோலையில் மாவீரர் தின நிகழ்வு நடத்துவதற்கு வழங்கப்பட்டுள்ள தடையுத்தரவு தொடர்பான வழக்கு, நாளை (26) வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கொக்கட்டிச்சோலையில் மாவீரர் தின நிகழ்வுகளை நடத்துவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் முற்பட்ட நிலையில், கொக்கட்டிச்சோலை பொலிஸாரால் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் அதற்கு எதிராக தடையுத்தரவு பெறப்பட்டுள்ளது.

பொதுத் தொல்லைகளைத் தவிர்த்தல், தனித்தல் என்கின்ற குற்றவியல் சட்டக்கோவையின் 106: 01 பிரிவின் கீழ் தடையுத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு,  மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சி.றிஸ்வான் முன்னிலையில், நேற்று (24) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, அரியநேத்திரன் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.கே.சுமந்திரன், சிரேஷ்ட சட்டத்தரணி பே.பிரேம்நாத், சட்டத்தரணி சயந்தன் ஆகியோர் ஆஜராகியிருந்தனர்.

வழக்கு விசாரணையின் போது வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றன. மேற்படி நிகழ்வு, விடுதலைப் புலிகளை மீள உருவாக்க மேற்கொள்ளப்படும் செயற்பாடு என கொக்கட்டிச்சோலை பொலிஸார் வாதங்களை முன்வைத்தனர். 

இந்த வழக்கில், நகர்வுப்பத்திரம் சமர்பித்து ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ள தடையுத்தரவை நீக்குமாறும் அதற்கான காரணங்களை மன்றில் சமர்பித்துள்ளதாகவும் தெரிவித்த சட்டத்தரணி சுமந்திரன், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தையோ அல்லது தனிமைப்படுத்தல், தொற்று நோய் பரவுதல் தடுத்தல் சட்டத்தையோ மீற மாட்டோம் என்ற உத்தரவாதத்தை நீதிமன்றத்துக்குக் கொடுத்துள்ளதாகவும் தெரிவித்தார். 

இவை தொடர்பில் ஆராய்ந்த நீதிபதி ஏ.சி.றிஸ்வான், வழக்கை, நாளை 26ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .