2026 ஜனவரி 09, வெள்ளிக்கிழமை

‘பெரும்பான்மை தலைவர்களை இசையச் செய்வது முயல்கொம்பானது’

பேரின்பராஜா சபேஷ்   / 2017 ஒக்டோபர் 04 , பி.ப. 06:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

“புதிய அரசமைப்பு விடயத்தில் பெரும்பான்மை இனத் தலைவர்களை இசையச் செய்வதென்பது, முயல்கொம்பான விடயமாகும்” என, இலங்கைத் தமிழரசுக் கட்சி பொதுச் செயலாளர் கி.துரைராஜசிங்கம் தெரிவித்தார்.

மட்டக்களப்பு, வந்தாறுமூலை மாருதி பாலர் பாடசாலையில் நேற்று (03) நடைபெற்ற கலைவிழாவில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே, அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

“இந்த நாட்டிலே தற்போது புரட்டப்பட்டிருக்கின்ற புதிய பக்கங்கள், எமது கனவை நனவாக்குகின்ற செயற்பாட்டைச் செய்து கொண்டிருக்கின்றன. ஒரு ஜனநாயக நாட்டின் நடவடிக்கைகளின் முற்றுப்புள்ளி என்பது, அரசமைப்புச் சட்டத்தை உருவாக்குவது என்பதுதான்.

“இந்த அரசமைப்புச் சட்டம் உருவாக்குவது என்கின்ற விடயத்தில் இதனை உருவாக்குவதற்கான சூழ்நிலையை உருவாக்கியவர், எமது தலைவர் சம்பந்தன் ஐயா என்பதை நாம் உறுதியாகக் கூற முடியும்.

“புதிய அரசமைப்பை ஆக்குவதற்கு நாடாளுமன்றத்தை நாங்கள் ஒன்றாகத் திரட்டியிருக்கின்றோம். இதற்கு முன்பு ஆக்கப்பட்ட எல்லா அரசமைப்புச் சட்டங்களிலும் தமிழ் மக்களும் தமிழ் மக்களின் கோரிக்கைகளும் புறக்கணிக்கப்பட்டன.

“ஆனால், இப்போது இருக்கின்ற அரசமைப்புச் சட்டம், இந்த நாட்டினுடைய முழுமையான நாடாளுமன்றத்தால் ஆக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

“குறிப்பாகச் சொல்லப் போனால் சிறுபான்மை மக்களின் அதிலும் தமிழ் மக்களின் பங்களிப்போடு, இந்த அரசமைப்புச் சட்டம் ஆக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

“நாங்கள் கேட்டுக் கொண்ட அளவுக்கு அதிகாரங்கள் விரிவாக்கம் செய்யப்பட்டிருக்கின்றன, பரவலாக்கப்பட்டிருக்கின்றன. மாகாண ஆளுநர் அரசியல் நடவடிக்கையிலே ஈடுபடக் கூடாது என்கின்ற விடயமும் வருகின்றது.

“இந்த அரசமைப்புச் சட்டம் உருவாக்கப்பட வேண்டும். அது ஒரே மனதாக தீர்மானிக்க வேண்டும் என்கின்ற விடயத்தில், எமது தலைவர், ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் ஒத்தகருத்துள்ளவர்களாக இருந்து, மிக இராஜதந்திரமாகக் கையாண்டு, தீர்மானத்தை எவ்வித எதிர்ப்பும் இல்லாமல் நாடாளுமன்றத்திலே நிறைவேற்றினார்கள்.

“இது நமது நாட்டின் சரித்திரத்திலே பொறித்து வைக்கப்பட வேண்டிய விடயமாகும். அந்த அடிப்படையில், தற்போது அரசமைப்பின் இடைக்கால அறிக்கை வெளியிடப்பட்டிருக்கின்றது.

“சிங்களத் தலைவர்களால் சமஷ்டி கொடுக்கப்படவில்லை என்கின்ற சொல்லானது, பிரிந்து செல்வதற்கு அனுமதிக்கப்படவில்லை என்கின்ற செய்தி மாத்திரமேயாகும். அதனை நாங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்” என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .