2020 மே 31, ஞாயிற்றுக்கிழமை

‘மாகாண சபை என்ற அலகில் பெயரளவிலேயே அதிகாரங்கள்’

Editorial   / 2020 பெப்ரவரி 12 , பி.ப. 05:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன், கே.எல்.ரி.யுதாஜித்

மத்திய அரசாங்கம்,   மாகாண சபை என்கின்ற அலகை வெறுமனே பெயரளவில் வைத்துக் கொண்டு, அதிகாரப் பகிர்வு, நிதியொதுக்கீடுகளை வெகுவாகக் கட்டுப்படுத்தியுள்ளதாக, மட்டக்களப்பு மாநகர மேயர் தி.சரவணபவன், பிரித்தானிய உயர்ஸ்தானிகரிடம் தெரிவித்துள்ளார்.

இதனால் அபிவிருத்தி உள்ளிட்ட விடயங்களை மேற்கொள்வதில் சிரமங்களை எதிர்நோக்குவதாகவும் மேயர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டன், மட்டக்களப்பு மாநகர சபைக்கான விஜயமொன்றை, நேற்று (11)  மேற்கொண்டார்.

இதன்போது, கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் குறித்தும், உள்ளூராட்சி சபைகளுக்கு மத்திய அரசாங்கத்திடமிருந்து கிடைக்கப் பெறும் ஒதுக்கீடுகள் உள்ளிட்ட மாநகர சபையின் எதிர்கால அபிவிருத்தி இலக்குகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டன.

அத்துடன், மாநகர சபையால் யுனிசெப் நிறுவனத்துடன் இணைந்து செயற்படுத்தப்பட்டுவரும் சிறுவர், பெண்கள் பாதுகாப்பு நகரச் செயற்றிட்டம் தொடர்பான விடயங்களும் எடுத்துரைக்கப்பட்டன.

மாநகர சபைக்குள் மேற்கொள்ளத் திட்டமிடப்பிட்டுள்ள அபிவிருத்தி செயற்பாடுகளுக்கான முதலீட்டாளர்களைப் பெற்றுக்கொள்வதில் உள்ள பிராயத்தனங்கள் தொடர்பாகவும் உயர்ஸ்தானிகருக்கு எடுத்துக் கூறப்பட்டன.

இங்கு கலந்துரையாடப்பட்ட விடங்கள் தொடர்பில் தான் கவனம் செலுத்துவதாகவும், பிரித்தானியாவிடம் இருந்து மட்டக்களப்புக்கு முதலீடுகளை பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகவும் உயர்ஸ்தானிகர் உறுதியளித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 

X

X