2025 செப்டெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

அக்கரபத்தனை, ஹோல்புறூக் விஞ்ஞானக் கல்லூரிக்கு அடிப்படை வசதிகள் இல்லை

கு. புஷ்பராஜ்   / 2019 நவம்பர் 27 , பி.ப. 01:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

நுவரெலியா கல்வி வலயத்துக்குட்பட்ட, அக்கரபத்தனை, ஹோல்புறூக் விஞ்ஞான கல்லூரியில், தரம் 1 முதல் 13 வரை வகுப்புகள் இருந்தாலும், அப்பாடசாலைக்கு எந்தவொரு அடிப்படை வசதிகளும் இல்லை என, குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சின் ஆயிரம் பாடசாலை வேலைத்திட்டத்தின் கீழ், 2013ஆம் ஆண்டு இக்கல்லூரியில் இருந்து ஆரம்பப்பிரிவு பாடசாலை தனியாக ஆரம்பிக்கப்பட்டது. இதற்கான நிர்வாகனம் தனியாக செயற்பட்டும் வரும் நிலையில், 400 மாணவர்களுக்கு 19 ஆசிரியர்கள் மாத்திரமே கடமையாற்றி வருகின்றனர்.

20 அடி அகலமும் 100 அடி நீளமும் கொண்ட கட்டடத்தில், எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லை என்றும் ஒரே வகுப்பில், இரண்டு, மூன்று வகுப்புகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு இடவசதிகள் இன்மையால், பெற்றோரும் நலன்விரும்பிகளும் இணைந்து, தகரத்தினால் ஆன கூடாரங்களை அமைத்து, சாரிகளால் மறைத்து மறைத்து வைத்துள்ளனர் என்றும் மழைக்காலத்திலும் வெயில் காலத்திலும் மாணவர்கள் சிரமத்தில் மத்தியிலேயே கல்வி கற்று வருவதாகவும் பாடசாலை நிர்வாகம் தெரிவித்தது.

அத்துடன், இப்பாடசாலை மாணவர்களுக்கு மலசலக்கூட வசதிகள் இல்லை என்றும் இவ்வாறு பல பிரச்சினைகள் காணப்படுவதால், மாணவர்களின் எதிர்கால வாழ்க்கை பாதிப்படைவதாகவும் பெற்றோர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இப்பாடசாலைக்கான புதிய கட்டடத்தைப் பெற்றுக்கொடுப்பதற்காக, இ.தொ.கா தலைவரும் தற்போதைய அமைச்சருமான ஆறுமுகன் ​தொண்டமானும் மத்திய மாகாண சபை முன்னாள் உறுப்பினருமான ஏ.பி.சக்திவேல், பெல்மோரல் தோட்ட நிர்வாகத்துடன் கலந்துரையாடி, மூன்று மாதங்களுக்கு முன்னர் இடத்தைப் பெற்றுக்கொடுத்ததாகவம் ஆனால், கட்டடம் அமைப்பதற்கு, கல்வியமைச்சு நிதி வழங்கவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தக் கட்டடம் அமைப்பதற்கான நிதியைப் பெற்றுக்​கொள்வதற்காக, அதிபர் உள்ளிட்ட ஆசிரயர்கள், பெற்றோர் அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் அனைவரும், மத்திய மாகாண கல்வித்திணைக்களம், நுவரெலியா வலயக் கல்விப் பணிமனை, மலையக அரசியல் தலைவர்களிடம் பலமுறை கோரிக்கைகள் முன்வைத்த போதிலும், இதுவரையில் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

எனவே, உரிய அதிகாரிகள் இது குறித்து நடவடிக்கை எடுத்து, மாணவர்களின் கல்வி நடவடிக்கை சீராக நடைபெறுவதற்கு வழி செய்து கொடுக்கவேண்டும் என, பாடசாலை சமூகம் கோரிக்கை விடுத்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X