2025 ஜூலை 09, புதன்கிழமை

’ஐக்கியப்பட்டால் உரிமைகளை பெறலாம்’

Kogilavani   / 2017 ஜூன் 12 , பி.ப. 12:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.செல்வராஜா

“வடக்கு, கிழக்கு, மலையகம் என்று பிரிந்து செயற்படாமல், அனைத்து தமிழர்களும் ஒன்றிணைந்து, ஐக்கியமாக செயற்படுவேமேயானால், எமக்கான உரிமைகளை எளிதில் வென்றெடுக்க முடியுமென்பதுடன், எமது பலமும் அதிகரிக்கும்” என்று, வடக்கு மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்தார்.

பதுளை மாவட்டத்தின் மிகவும் பின்தங்கிய பகுதியான ஒஹிய, உடவெறியா, வெஸ்ட் ஹப்புத்தளை ஆகிய பிரதேசங்களிலுள்ள தமிழ் பாடசாலை மாணவர்களுக்கு, பாதணிகள் மற்றும் காலுறைகள் வழங்கும் நிகழ்வு, ஞாயிற்றுக்கிழமை, பதுளையில் நடைபெற்றது.

பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்தகுமாரின் கோரிக்கைக்கமைய, வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன், இரண்டு இலட்ச ரூபாய் பெறுமதியான பாதணிகள் மற்றும் காலுறைகளை, மேற்படி மாணவர்களுக்கு வழங்கி வைத்தார். 

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் இவ்வாறு கூறினார்.  இங்கு மேலும் கூறிய அவர்,

'நாடாளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்தகுமார் என்னிடம் விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாகவே, இம்மாணவர்களுக்கு பாதணிகளையும் காலுறைகளையும் வழங்கி வைக்கின்றேன். நான் வழங்கிய இந்த உதவிக்கு, பூரண தகுதியும் தகைமைகளை உடையவர்கள் இந்த மாணவர்களே என்பதை, நான் இங்கு வந்த பிறகே உணர்ந்துகொண்டேன்.

தகுதியானவர்களுக்கு இவ்வுதவிகள் சென்றடைய வழிகாட்டிய அரவிந்தகுமார் எம்.பிக்கு நான் நன்றிகூற கடமைப்பட்டுள்ளேன்.

யுத்தத்தின் பாதிப்பு, வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இன்னும் நீடித்துக்கொண்டுதான் இருக்கின்றது.  ஆனால், யுத்தமொன்று இடம்பெறாத பதுளை மாவட்டத்தின் ஒஹிய, உடவெறியா, வெஸ்ட் ஹப்புத்தளை ஆகிய பிரதேசங்கள் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை போன்றே உள்ளன.   

இயற்கை அழிவுகள், வறுமை, தொழில்வாய்ப்பின்மை, உழைப்புக்கேற்ற ஊதியமின்மை, போக்குவரத்து வசதியின்மை, சிறார்களுக்கு போஷாக்கின்மை போன்ற இன்னோரன்ன அவலங்களில், இப்பகுதி மக்கள் வாழ்ந்து வருவதை அவதானிக்க முடிகின்றது. எனவே, இது விடயங்களில், மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் அரசியல் தலைமைகள், உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளல் வேண்டும்.

மலையகம் சொர்க்கபுரியாக இருக்குமென்றே நாம் கருதினோம். ஆனால், அவலம் நிறைந்த பிரதேசங்களில் மலையகமும் ஒன்று என்பதை இங்கு வந்து பார்த்தபின்புதான் புரிகின்றது” என்று அவர் மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .