2021 மே 06, வியாழக்கிழமை

கம்பனிகளுடன் தனித்தனியாகப் பேசப்போவதாக இ.தொ.கா கொக்கரிப்பு

Kogilavani   / 2016 ஓகஸ்ட் 01 , மு.ப. 04:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

க.ஆ.கோகிலவாணி

'கூட்டொப்பந்தப் பேச்சுவார்த்தை என்பது, வெறுமனே தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வை பெற்றுக்கொடுப்பது மட்டுமல்ல. அது தொழிலாளர்களின் உரிமைசாசனமாகவும் உள்ளது. 2,500 ரூபாய் என்பது வெறும் இடைக்கால கொடுப்பனவு மட்டுமேயாகும். அதனை பெற வேண்டாமென நாங்கள் கோரவில்லை. அதனை நாங்களும் வரவேற்கின்றோம்' என இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கூறியுள்ளது.

'இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸானது, எதிர்வரும் வாரங்களில் பெருந்தோட்டக் கம்பனிகளை அழைத்து, தனித்தனியாக பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளது. அதன்பின் கலந்தாலோசித்து ஒரு தீர்வை காணுவோம். எனவே, கூட்டுஒப்பந்தப் பேச்சுவார்த்தைக்கு உந்துசக்தி கொடுத்து, தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளத்தையும் உரிமைகளையும் பெற்றுக்கொடுக்க அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்' எனவும் அவர் கோரினார்.

இ.தொ.கா மற்றும் சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனத்தின் ஏற்பாட்டில் மகளிருக்கான  தலைமைத்துவ செயலமர்வு, ஊவா மாகாண சபை கேட்போர்  கூடத்தில், நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே காங்கிரஸின் உப-செயலாளர் எஸ். அருள்சாமி இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

இ.தொ.காவானது  76 ஆண்டுகள், சிறப்பான சேவையை முன்னெடுத்ததன் காரணமாகவே, இன்று பெண்கள்கூட தலைமைத்துவ தகுதிகளைக் கொண்டவர்களாக உருவாக்கப்பட்டுள்ளனர். தொழிற்சங்கப் போராட்டங்களில்   பெண்கள் தியாகம் செய்து போராடியதன் மூலமாகவே இன்று பலர் உரிமைகளை பெற்றுக்கொண்டனர்.

வெள்ளையர் காலத்தில் நாவலப்பிட்டி லெச்சுமித் தோட்டத்தில் „ஆறாயி... என்ற பெண், துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்து, மலையக பெண்களின் உரிமைகளை பாதுகாத்தார்.

எமது மூதாதையர் காலத்தில்,  மாரியாயி, வீராயி, காளியம்மா  என்ற பெயர்கள் வைக்கப்பட்டதால் அக்கால பெண்கள் வீரமிக்கவர்களாக விளங்கினர். காலபோக்கில் சினிமா மோகத்தில் மூழ்கிய  எமது சமூகம், சினிமா நட்சத்திரங்களின் பெயர்களை வைத்துகொண்டு வீரமற்றவர்களாக மாறியதால் இன்று எம்மை பலர் கூறுபோடுகின்றனர்' என அவர் சுட்டிக்காட்டினார்.

எனவே, 'மலையக பெண்கள் தடைகளைத் தகர்த்தெரிந்து, சிறந்த தலைவிகளாக உருவாகி  எமது சமூகத்தை பாதுக்காக்க வேண்டும் என்ற நோக்கிலேயே, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் சர்வதேச  தொழிலாளர் ஸ்தாபனத்துடன் இணைந்து இத்தகைய தலைமைத்துவ செயலமர்வுகளை நடத்தி வருகின்றது' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .