2021 மே 09, ஞாயிற்றுக்கிழமை

கேகாலை மக்களுக்கு வீடுகளை நிர்மாணிக்க அமைச்சரவை அனுமதி

Kogilavani   / 2016 ஜூலை 28 , மு.ப. 03:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஜே.ஏ.ஜோர்ஜ்

கேகாலை மாவட்டத்தில் இயற்கை அனர்த்தங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, வீடுகளை அமைத்துக்கொடுப்பது தொடர்பில் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு, அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளதாக நாடாளுமன்ற மறுசீரமைப்பு, வெகுசன தொடர்பாடல் அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை வெளியிடும் செய்தியாளர் சந்திப்பு, நேற்று புதன்கிழமை நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.  

2016ஆம் ஆண்டு மே மாதம் 10ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரையான காலப்பகுதியில் கேகாலை மாவட்டத்தில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட மண்சரிவில் 151 பேர் உயிரிழந்ததுடன் 9,620 குடும்பங்களைச் சேர்ந்த 34,833 பேர் பாதிக்கப்பட்டனர்.

கடந்த ஜுன் மாதம் 1ஆம் திகதி இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில் கலந்துகொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பாதிக்கப்பட்ட மக்களுக்கு துரிதமாக இழப்பீட்டை பெற்றுக்கொடுக்குமாறு பணித்தார்.

இந்த மக்களின் வாழ்க்கையை சாதாரண நிலைக்குக் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை விரைவில் செயற்படுத்த அன்றைய கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

அதனையடுத்து, பகுதியளவில் பாதிக்கப்பட்ட 1,845 வீடுகளை நிர்மாணிக்க தேவையான 2,018.4 மில்லியன் ரூபாயை, தேசிய காப்புறுதி நம்பிக்கை நிதியத்திலிருந்து பெற்றுக்கொள்ளும் யோசனை, அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டது.

அத்துடன், முழுமையாக பாதிக்கப்பட்ட 230 வீடுகள் உள்ளிட்ட 1,682 வீடுகளை 2,018.4 மில்லியன் ரூபாய் நிதியில் நிர்மாணிப்பதுடன் தனிப்பட்ட காணியில் வீடுகளை நிர்மாணிக்க முன்வந்துள்ள 500 பேருக்கு  தலா 4 இலட்சம் ரூபாய் வீதம் 200 மில்லியன் ரூபாயை வழங்கவும் யோசனை முன்வைக்கப்பட்டிருந்தது.

அத்துடன், குறித்த இடத்தை பாதுகாப்பு வலயமாக அறிவிப்பதுடன், வீடுகளை பாதுகாப்பான முறையில் அமைக்க தேசிய கட்டட ஆய்வு நிறுவனத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வது தொடர்பிலும் ஆலோசனை முன்வைக்கப்பட்டிருந்தது.

அனர்த்த முகாமைத்துவ அமைச்சர்  அநுர பிரியதர்ஷன யாப்பாவால் முன்வைக்கப்பட்ட இந்த யோசனைக்கு செவ்வாய்க்கிழமை கூடிய அமைச்சரவை, அனுமதி அளித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X