2020 நவம்பர் 25, புதன்கிழமை

“சட்ட ஆலோசனைகளை வழங்க சட்டதரணிகள் முன்வர வேண்டும்”

Kogilavani   / 2016 டிசெம்பர் 26 , மு.ப. 11:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன்

“மலையக மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகளுக்கு, சட்ட ஆலோசனைகளை வழங்க, மலையக சட்டதரணிகள் முன்வர வேண்டும்” என நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் கோரிக்கை விடுத்துள்ளார்.

பொகவந்தலாவை தோட்டத்தில் சட்ட ஆலோசனைகளை வழங்கும் செயலமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினர். இங்கு தொடர்ந்துரைத்த அவர் மேலும் கூறுகையில்,

“உரிமைசார், அபிவிருத்தி சார்ந்த பிரச்சினைகள் மட்டுமல்லாது சட்டம் சார்ந்த பல்வேறு பிரச்சினைகளும் மலையக சமூகத்துக்கு இருக்கிறது. நான் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையை செவிடுத்த, இலங்கை சட்ட உதவி ஆணைக்குழு, இன்று மலையகத்தில் சட்ட ஆலோசனைச் செயலமர்வுகளை நடத்துவதற்கு முன்வந்துள்ளது. எனினும், அவர்கள் குறைந்த அளவான நிதியைக் கொண்டு, முழுமையான நிகழ்ச்சித் திட்டத்தை முன்னெடுக்க முடியாது.

ஆனால், இவர்களுடன் கைகோர்த்து, மலையக சட்டதரணிகள் மக்களுக்கான ஆலோசனை சேவையை மலையகமெங்கும் தன்னார்வ தொண்டாக முன்னெடுக்க முடியும். அதற்கான களம் இன்று திறந்துவிடப்பட்டுள்ளது” என்றார்.

“நாடாளுமன்றில் மலையக மக்களின் பிரச்சினைகள் பேசப்படுவதில்லை என்கிற குற்றச்சாட்டுகள் ஒருபுறம் இருக்க, நாடாளுமன்றில் பேசிப் பயனில்லை, நாங்கள் நேரடியாக நாட்டுத் தலைவர்களுடன் பேசி தீர்ப்போம் என ஒருசாரர் கூறுகின்றனர். நாடாளுமன்றம் என்பதே, மக்களின் பிரச்சினைகளை விவாதிப்பதற்கான களம்தான். அதனால்தான், அங்கு ஒவ்வொருவருக்கும் ஒலிவாங்கி பொருத்தப்பட்டிருக்கிறது.

உறுப்பினர்கள் சிலர், தாங்கள் பேசுவதற்காக நேரம் ஒதுக்கப்படவில்லை என முறையிடுகின்றனர். நான் கடந்த ஓராண்டு காலமாக, எனக்கு கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தி பல உரைகளை ஆற்றியிருக்கிறேன். பல பிரேரணைகளை முன்வைத்தும் உரையாற்றியிருக்கிறேன். புஸ்ஸல்லாவை பொலிஸ் நிலையத்தில், இளைஞர் ஒருவரின் மரணம் தொடர்பில் சட்ட உதவி ஆணைக்குழுவின் அவசியம் குறித்து ஆற்றிய உரையின் பயனாக, இன்று சட்ட உதவி ஆணைக்குழு, தனது பணிகளை ஆரம்பித்துள்ளது.

சட்ட உதவி ஆணைக்குழு குறைந்த நிதியுடன் இயங்கும் ஓர் ஆணைக்குழுவாகும். எனினும், அவர்கள் இத்தகைய செயலமர்வுகளை நடத்த முன்வரும்போது, மலையக சட்டத்தரணிகள் தன்னார்வ தொண்டர்களாக முன்வந்து மக்களுக்காக பணியாற்ற முடியும். தமது சட்ட அறிவைக்கொண்டு, சமூக பணியாற்றும் சந்தர்ப்பமாக அதனைக் கொள்ள முடியும்.

கூட்டொப்பந்தத்துக்கு எதிராக, சட்டத்தரணி இ.தம்பையா வழக்குத் தாக்கல் செய்திருப்பதாக ஊடகங்களின் வாயிலாக அறிந்துகொண்டேன். சமூகத்துக்கு ஒவ்வொருவரும் ஆற்ற வேண்டிய பணி ஏராளமாக இருக்கிறது. அதனை ஒவ்வொருவரும் அவரவர் வழிகளில் செய்ய முன்வர வேண்டும். எல்லாவற்றுக்கும் அரசியல்வாதிகளிடமே தீர்வு தேட முற்படக்கூடாது. இனிவரும். காலங்களில் இதுபோன்ற பல செயலமர்வுகளை நடத்த சட்ட உதவி ஆணைக்குழு தயாராகவேயுள்ளது” என்றும் அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .