2021 மே 06, வியாழக்கிழமை

முக்கிய பங்காளிக்கு முக்கிய பதவி, சிறு குற்றமிழைத்தோருக்கு சிறையா?

Princiya Dixci   / 2015 நவம்பர் 17 , மு.ப. 04:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

- பா.திருஞானம்

யுத்தத்தின் போது முக்கிய பங்காளிகளாக செயற்பட்டவர்கள் பலரும் இன்று பல்வேறு பதவிகளில் இருக்கின்றார்கள். ஆனால், யுத்தத்தின் போது சிறு தவறுகளை இழைத்தோர் சிறையில் வாடுகின்றனர் என்று இராஜாங்க கல்வியமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்தார்.

வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு மாணவர்களுக்கு பரிசில்களை வழங்கி வைத்ததன் பின்னர் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக மலையக மக்கள் முன்னணியும் தமிழ் முற்போக்கு கூட்டணியும் இணைந்து அழுத்தம் கொடுத்தது. இந்த கைதிகளில் எமது மலையக இளைஞர், யுவதிகளும் உள்ளடங்குகின்றனர். அது மட்டுமல்லாமல் வடக்கு மற்றும் கிழக்கு உட்பட அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்தவர்களும் உள்ளடங்குகின்றார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

இன்று எமது தமிழ் மக்களின் முக்கிய பிரச்சினையாக மாறியிருப்பது இந்த தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பான விடயமேயாகும். அரசியல் கைதிகள் பலர் பல்வேறு சிறைச்சாலைகளிலும் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள்.

யுத்தத்தில் முக்கிய பங்காளிகளாக செயற்பட்டவர்கள் பலரும் இன்று பல்வேறு பதவிகளில் இருக்கின்றார்கள். ஆனால், யுத்தத்தின் போது சிறு தவறுகள் செய்தவர்கள் சிறைகளில் வாடுகின்றார்கள். அவர்களின் பிள்ளைகள், பெற்றோரின் வரவை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள். அவர்களின் குடும்பங்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக மாறியுள்ளது.

ஆகையால், அவர்களின் விடுதலைக்காக அரசாங்கம் உரிய நடவடிக்கையை எடுக்கவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .