2021 மே 18, செவ்வாய்க்கிழமை

மீரியபெத்த மக்களின் விமோசனத்துக்காக ஆண்டவரிடம் கையேந்தியுள்ளோம்

Kogilavani   / 2015 நவம்பர் 19 , மு.ப. 10:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

'நல்லாட்சியில் மட்டுமன்றி சுதந்திரத்துக்கு முன்பும் பின்பும் ஆட்சி செய்த அனைத்து அரசாங்கங்களும் மலையக மக்களுக்கு எதனையும் உறுப்படியாக செய்ததாக தெரியவில்லை. பறித்தெடுக்கப்பட்ட பிரஜா உரிமையும் வாக்குரிமையும் ஆண், பெண் சம சம்பளமும் அம்மக்கள் ஒன்று சேர்ந்து முன்னெடுத்த பிரார்த்தனை இயகத்தின் மூலமாகவே பெறப்பட்டதாகும். அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் தீர்க்கதரிசனத்துடன் கையெடுத்த அகிம்சை என்னும் ஆயுதமே இதன் வெற்றிக்கு வித்திட்டது' என  சௌமிய இளைஞர் நிதியத்தின் தலைவரும் சர்வமத சமாதான நிதியத்தின் ஊடக செயலாளருமான எஸ்.பி.அந்தோனிமுத்து தெரிவித்தார்.

'மலையக மண்ணுக்கு சமாதானம்' என்ற தொனிப்பொருளில் சர்வமத பிரார்த்தனை, கொழும்பு பௌத்தாலோக்க மாவத்தையிலுள்ள லங்காசபை ஆயர் இல்ல கேட்போர் கூடத்தில் செவ்வாய்க்கிழமை (17) நடைபெற்றது. இந்நிகழ்வில்  கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை கூறினார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

'சுனாமி அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஒருமாத காலத்தில் 1,000 கணக்கான நடுநிலை இருப்பிடங்களையும் ஒருவருட காலத்தில் நூற்றுக்கணக்கான நிரந்தர வீடுகளையும் அமைப்பதற்கு அரசாங்கத்துடன் செய்துகொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்துடன் தேசிய சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களால் முடிந்தது.

சுனாமி அனர்த்தத்துக்கு சமமான  அழிவுகளை தனதாக்கிக்கொண்ட  மீரியபெத்த தோட்ட மக்கள் இன்னமும் வீடின்றி, வாசலின்றி, வாழ வழியின்றி தவிர்ப்பதை பார்த்துக்கொண்டு இருப்பதை விட இந்த மக்களது விமோசனத்துக்காக ஆண்டவரிடம் கையேந்தி பிரார்த்தனை செய்ய ஆரம்பித்துள்ளோம்.

இதன்மூலம் பொறுப்புவாய்ந்தவர்களுக்கு தங்கள் கடமையை காலதாமதமின்றி செய்ய ஆசீர்வாதம் மட்டுமின்றி அறிவுறுத்தலின் அழுத்தத்தையும்  கொடுப்பதே இவ் வேலைதிட்டத்தின் நோக்கமாகும்.

20ஆம் திகதி வாசிக்கப்படும் வரவு-செலவு திட்டத்தில் இம்மக்களுக்கு விமோசனம் கிடைக்கவேண்டியே 17ம் திகதியான இன்று(செவ்வாய்க்கிழமை) இவ்ஆன்மீக வழிப்பாடு நடத்தப்பட்டது. இது ஆரம்பம் மட்டுமே. எமது பிரார்த்தனை தொடரும். இந்த பிரார்த்தனை இயக்கத்துக்கு அனைவரினதும் ஆதரவையும் ஒத்துழைப்பையும் நல்கவேண்டும்' என அவர் கோரினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .