2021 ஏப்ரல் 19, திங்கட்கிழமை

5 வருடங்களுக்கு அசைக்க முடியாது: அமைச்சர் திகா

Kogilavani   / 2016 மார்ச் 28 , மு.ப. 07:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

'யார்? என்னக் கூறினாலும் இந்த அரசாங்கத்தை 5 வருடங்களுக்கு  அசைக்க முடியாது. அதேப்போன்று அதிகாரம் பெற்ற எனது அமைச்சையும் அசைக்க முடியாது' என மலையக புதிய கிராமங்கள், அபிவிருத்தி மற்றும் உட்கட்டமைப்பு சமூக அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம்  தெரிவித்தார்.

'மலையக மக்களுக்கு சேவை செய்யும் இலக்கை அடிப்படையாகக் கொண்டே, நான் அமைச்சராகியுள்ளேன். என்னை எதிர்த்து போட்டியிடுபவர்களுக்கு சவால் விடவும் நான் தயாராகவுள்ளேன். ஏனையவர்களுக்கு பயந்தோ அல்லது மக்களை காட்டிக் கொடுத்தோ எனது சேவையை முன்னெடுக்கமாட்டேன்' என்றும் அவர் கூறினார்.

நானுஓயா டெஸ்போர்ட் கீழ்பிரிவு, மேற்பிரிவு, கிலோஷா ஆகிய பகுதிகளில் இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 61 புதிய வீடுகளை அமைத்துகொடுப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை(28) கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை கூறினார்.

அவர் அங்கு மேலும் கூறுகையில்,

'இந்திய வீடமைப்பு திட்டத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வுகள் அடுத்த மாதத்தில் ஆரம்பிக்கப்படும். 30 வருட காலங்களில் தோட்ட தொழிலாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தி வந்தவர்கள், மலையக தொழிலாளர்களுக்கு   தலா 7 பேர்ச் காணியை பெற்றுக்கொடுத்திருந்தால் இக்காலப்பகுதியில் எத்தனையோ தொழிலாளர்கள் நன்மையடைந்திருப்பார்கள். ஆனால் அது நடக்கவில்லை.

தோட்ட தொழிலாளர்களுக்கென கடந்த அரசாங்கத்தில் 10 ஆண்டு வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. அது என் மூலமாக தூசு தட்டப்பட்டு 5 ஆண்டு வேலைத்திட்டமாக தற்பொழுது முன்னெடுக்கப்படவுள்ளது. இதன் ஊடாக தோட்டப்பகுதிகளில் மக்கள் பாவனைக்குதவாமல் உள்ள வீதிகள், மக்களின் அடிப்படை வசதிகள் அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றது' என்றார்.   

'உலக சந்தையில் தேயிலை விலை அதிகரித்தால் சம்பளத்தை பெற்றுத்தருகிறேன் என சில தலைமைகள் மேடைகளில் கூறி வருகின்றனர். தேயிலை விலை அதிகரித்தால் சாதாரணமாகவே தோட்ட தொழிலாளர்களுக்கு சம்பளமும் அதிகரிக்கும்.

இந்த சம்பள விடயத்தில் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா அல்லது 2000 ரூபாய் எவர் பெற்றுக்கொடுக்க முன் வந்தாலும் அதற்கு ஆதரவு வழங்க நான் தயாராகவுள்ளேன்.     சம்பள உயர்வு பெற்றுகொடுப்பதற்கான அதிகாரங்களை எனக்கு வழங்கினால் தோட்ட தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வை பெற்றுகொடுக்க நான் தயராகவுள்ளேன்' என அவர் மேலும் கூறினார்.

'இந்த அரசாங்கத்தில் மலையக அமைச்சர் ஒருவர் தோட்டக் காணிகளை அரைவாசியாக பிரித்து மக்களுக்கும் நிர்வாகத்துக்கும் வழங்க ஏற்பாடு செய்கின்றார். ஆனால், நாம் கூறுவது தோட்ட தொழிற்சாலையை மாத்திரம் நிர்வாகம் வைத்துக்கொண்டு முழுமையான தேயிலை காணியை எமது மக்களுக்கு கொடுக்க வேண்டும் என்பதையே நாம் வலியுறுத்துகிறோம்' என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .