2021 மார்ச் 08, திங்கட்கிழமை

பொகவந்தலாவை மாவட்ட வைத்தியசாலை குறைபாடுகளை நிவர்த்தி செய்ய கோரிக்கை

Menaka Mookandi   / 2010 ஒக்டோபர் 07 , மு.ப. 04:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.சுவர்ணஸ்ரீ)

பொகவந்தலாவை மாவட்ட வைத்தியசாலையில் ஏற்பட்டுள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு மத்திய மாகாண சுகாதார அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக மத்திய மாகாணசபை உறுப்பினரும், இலங்கை தொழிலாளர் காங்கிரசின் அரசியல்பிரிவு உதவிச் செயலாளருமான கணபதி கனகராஜ் தெரிவித்தார்.

மத்திய மாகாணசபையின் மாதாந்த சபை அமர்வில் கலந்து கொண்டு பேசிய போதே இந்த வேண்டு கோளை விடுத்ததாகவும் அவர் கூறினார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், "பொகவந்தலாவை பிரதேசத்தில் வாழ்கின்ற சுமார் 60 ஆயிரம் மக்களின் வைத்திய தேவைக்காக இயங்கிவரும் பொகவந்தலாவை மாவட்ட வைத்தியசாலை ஆங்கிலேயர் காலத்து கட்டிடங்களுடனேயே தற்போதும் இயங்கிவருகின்றது.

சனத்தொகை அதிகரிப்பிற்கேற்ப வைத்தியசாலையின் வளங்கள் அதிகரிக்கப்படாமல் உள்ளது. இந்த வைத்தியசாலையில் மருந்து தட்டுப்பாடு காணப்படுவதாக  பிரதேச மக்கள், மக்கள் பிரதிநிதிகளான எம்மிடம் முறையிடுகின்றனர்.

வைத்தியர்களால் சிபாரிசு செய்யப்படுகின்ற மருந்துப் பொருட்களைத் தனியார் மருந்தகங்களில்  பெற்றுக்கொள்வதற்கு பணவசதியற்றவர்கள் நோயுடனேயே வாழ வேண்டிய நிலையிலுள்ளதால் மத்திய மாகாண சுகாதார அமைச்சு அவசரமாக பொகவந்தலாவை வைத்தியசாலைக்கு தேவையான மருந்து வகைகளை அனுப்புவதற்கு தேவையான ஒழுங்குகளை செய்ய வேண்டும்.

அத்துடன், வைத்தியசாலையின் உட்கட்டமைப்பு வசதிகள் பெரும் குறைபாடுகளைக் கொண்டுள்ளன. மாவட்ட வைத்திய அதிகாரியின் உத்தியோகபூர்வ விடுதி உட்பட வைத்தியசாலை நோயாளர் விடுதிகளின் கூரைகள் மழைக்காலங்களில் ஒழுகுகின்றதை அவதானிக்க முடிகின்றது.

அத்துடன் தாதியர்களுக்கும், சிற்றூழியர்களுக்கும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. சிற்றூழியர் நியமனத்தின் போது பொகவந்தலாவை பிரதேசத்தை சார்ந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டிருந்தால் இக்குறிப்பிட்ட வைத்தியசாலையிலிருந்து இடமாற்றம் பெற்று செல்லும் தொகையை குறைத்திருக்க முடியும். 

எதிர்காலத்தில் சிற்றூழியர் நியமனங்கள் வழங்கப்படும் போது குறிப்பிட்ட பிரதேசத்தை சார்ந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படவேண்டும். அத்துடன் தற்போது இவ்வைத்தியசாலையில் நிலவும் பாரியளவு சிற்றூழியர், தாதியர் பற்றாக்குறையை நிவர்த்திக்க சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .