2021 பெப்ரவரி 26, வெள்ளிக்கிழமை

மத்திய மாகாண வைத்தியசாலைகளின் குறைபாடுகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை

Suganthini Ratnam   / 2010 ஒக்டோபர் 14 , மு.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.சுவர்ணஸ்ரீ)

மத்திய மாகாணத்திலுள்ள வைத்தியசாலைகளின் குறைபாடுகளை இனங்கண்டு அவற்றினை நிவர்த்தி செய்வதற்கான ஆய்வுகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இதற்கேற்ப இந்த வைத்தியசாலைகளைத் தரமுயர்த்தும் பணிகள் 2011ஆம் ஆண்டில் ஆரம்பமாகவுள்ளதாகவும் மத்திய மாகாண சுகாதார அமைச்சர் சுனில் அமரதுங்க தெரிவித்தார்.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் உதவிச் செயலாளரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான கணபதி கனகராஜின் அழைப்புக்கேற்ப மத்திய மாகாண சுகாதார அமைச்சர் சுனில் அமரதுங்க நேற்று புதன்கிழமை பொகவந்தலாவை மாவட்ட வைத்தியசாலைக்கு விஜயம் செய்தார். இதன்போது கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இவருடன் மத்திய மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் மத்திய மாகாண சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் உட்பட அதிகாரிகள்  பலரும் வருகை தந்திருந்தனர்.

44 தோட்டங்களை உள்ளடக்கிய பொகவந்தலாவை மாவட்ட வைத்தியசாலையின் மூலமாக பொகவந்தலாவை பிரதேசத்தைச் சேர்ந்த சுமார் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தமது சுகாதார வைத்திய சேவைகளை நிறைவேற்றிக்கொள்கின்றனர்.

இந்த வைத்தியசாலையில் பழமை வாய்ந்த கட்டிடங்கள் திருத்தப்பட வேண்டிய நிலையிலுள்ளன. அத்துடன், மேலும் பல குறைபாடுகள் காணப்படுகின்றன. இந்தக் குறைபாடுகளை அவதானித்த மத்திய மாகாண சுகாதார அமைச்சர் 2011ஆம் ஆண்டு மத்திய மாகாண வைத்தியசாலைகள் பலவற்றை அபிவிருத்தி செய்ய தாம் தீர்மானித்துள்ளதாகவும், அதனடிப்படையில் பொகவந்தலாவை மாவட்ட வைத்தியசாலை தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படவுள்ளதாகவும் தெரிவித்தார். அத்துடன் இவ்வைத்தியசாலையின் குறைபாடுகள் தொடர்பாக விரிவான அறிக்கையென்றை தமக்கு சமர்பிக்குமாறு மத்திய மாகாண சுகாதார அமைச்சின் செயலாளருக்கும் மத்திய மாகாண சுகாதார திணைக்கள இயக்குநருக்கும் அமைச்சர் உத்தரவிட்டார்.  இந்நிகழ்வில் பொகவந்தலாவை மாவட்ட வைத்திய அதிகாரி ஜெயசூரிய தலைமையிலான  வைத்தியசாலை நிர்வாகத்தினர் அமைச்சர் குழுவை வரவேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .