2021 ஜனவரி 18, திங்கட்கிழமை

லக்ஷபான வாழமலை தோட்டத்தில் தீ விபத்து: பாதிக்கப்பட்டவர்கள் தற்காலிகக் கொட்டில்களில் குடியேற்றம்

Suganthini Ratnam   / 2012 நவம்பர் 20 , மு.ப. 03:09 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஆர்.கமலி)


மஸ்கெலியா, நல்லத்தண்ணி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லக்ஷபான வாழமலை தோட்டத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் பாதிக்கப்பட்ட 14 வீடுகளைச் சேர்ந்த குடும்பங்கள் தற்காலிக் கொட்டில்களில் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை குடியேறியுள்ளனர்.

மஸ்கெலியா, நல்லத்தண்ணி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லக்ஷபான வாழமலை தோட்டத்தில் கடந்த 13ஆம் திகதி தீ விபத்து ஏற்பட்ட நிலையில், 14 வீடுகள் சேதமடைந்தன.

தோட்ட முகாமையின் முடிவுக்கு அமைய, எரிவடைந்த வீடுகளில் காணப்பட்ட கூரைத்தகரங்களைக் கொண்டு 3 குடும்பங்களுக்கு ஒரு கொட்டில் என்ற அடிப்படையில்  தீ விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தற்காலிகக் கொட்டில்கள் அமைத்துக்கொடுக்கப்பட்டுள்ளன.

தீ விபத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு முன்பாகவே இந்த தற்காலிகக் கொட்டில்கள் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் தீ விபத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த தற்காலிகக் கொட்டில்களில் குடியேறியுள்ளனர்.

இது தொடர்பில் தீ விபத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கையில்,

இந்த கொட்டில்கள் அமைப்பதற்கு தோட்ட முகாமையால் குடும்பம் ஒன்றுக்கு 10 தகரங்கள் என்ற அடிப்படையில் வழங்கப்பட்டன. இருப்பினும் அவை போதுமானதாக இல்லை.

அத்துடன், இந்தக்  கொட்டில்களில் இடவசதி போதாமல் உள்ளன. தரை முழுமையாக மண்ணாகக் காணப்படுவதால் சிறிது மழை பெய்தாலும் சேறாக மாறிவிடுகின்றன. கூரை தகரத்தால் அமைந்துள்ளதால் சிறுவர்களும் வயதானவர்களும் குளிர் மற்றும் வெப்பத்தை தாங்கமுடியாது சிரமப்படுகின்றனர். கொட்டில்களில் கைக்குழந்தைகளை வைத்துக்கொண்டு வாழ்வது மிக சிரமாக இருக்கின்றது. 

இதேவேளை, இந்த தீ விபத்தால் பாதிக்கப்பட்டவர்களில் தோட்டத்தில் வேலை செய்து ஓய்வூதியம் பெற்ற குடும்பங்களுக்கு தகரம் வழங்க தோட்ட முகாமை மறுத்துள்ளன. இதனால் அவர்கள் மேலும் பாதிப்படைந்துள்ளனர்.

தாங்கள் குடியிருந்த வீடுகளை உடனடியாக திருத்திக் கொடுக்குமாறு இந்த மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .