2025 ஜூலை 09, புதன்கிழமை

கண்டியில் தமிழ் பிரதிநிதித்துவம் பறிபோனால் இதொகாவே காரணம்: மனோ

A.P.Mathan   / 2013 ஓகஸ்ட் 04 , பி.ப. 01:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

கண்டி மாவட்ட தேர்தல் கள நிலைமைகள் புரியாமல் இதொகா கண்டியில் 32 தமிழ் வேட்பாளர்களை போட்டியிட வைத்து தமிழ் வாக்குகளை சிதறடிகின்றது. இதனால் கண்டி மாவட்டத்தில் இந்த முறை மாகாணசபை தமிழ் பிரதிநிதித்துவம் சிலவேளை பறிபோனால் அதற்கு இதொகாவே காரணமாக அமைய போகின்றது. தமிழ் இன உணர்வுடன் சப்ரகமுவ மாகாணத்தில் நாம் செய்த உதவிக்கு இதுதான் பிரதியுபகாரமா என ஆறுமுகன் தொண்டமானிடம் நான் கேட்க விரும்புகின்றேன் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன், கண்டி மாபேரிதென்னவில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய போது தெரிவித்தார்.
 
இங்கு மனோ கணேசன் மேலும் கூறியதாவது, 
 
கண்டியில் இப்போதும் கடைசியாக மாகாணசபையில் ஒரு தமிழ் பிரதிநிதித்துவம் இருந்தது. இந்த உண்மையை இதொகா திட்டமிட்டு மறைத்து பொய் பிரசாரங்களை கண்டியில் தமிழ் மக்கள் மத்தியில் செய்கின்றது. கண்டியில் தமிழ் பிரதிநிதித்துவம் இல்லவே இல்லை என்றும், அதை பெற்றுகொடுக்கவே தாம் அவதாரம் எடுத்து கண்டிக்கு வந்திருப்பதாக இதொகாவை சேர்ந்த சிலர் உண்மைக்கு மாறாக சொல்கின்றார்கள்.
 
இப்போது இருக்கும் ஒரு தமிழ் பிரதிநிதித்துவத்தைதான், நாம் இரண்டாக மாற்ற பாடுபடுகின்றோம். இதற்காகத்தான் கண்டியில் ஜனநாயக மக்கள் முன்னணி, ஐக்கிய தேசிய கட்சியுடன் கரங்கோர்த்துள்ளது. நமது கட்சி வேட்பாளராக படித்த ஒரு பட்டதாரி மலையகத்து இளைஞரான வேலு குமாரை நான் நேரடியாக தேர்ந்தெடுத்து கண்டியில் இதற்காகத்தான் களம் இறக்கியுள்ளேன். அதேபோல் கண்டியில் ஏற்கனவே மாகாணசபை உறுப்பினராக இருக்கும் ராஜரத்தினமும் எம்முடன் இணைந்து செயல்படுகின்றார். ராஜரத்தினம் கண்டியில் ஏற்கனவே மாகாணசபை உறுப்பினராக இருப்பதைதான் இல்லாதது போல் இதொகா திட்டமிட்டு காட்டுகின்றது. இது ஒரு திட்டமிட்ட பொய் பிரசாரம்.  
 
வேலு குமாரிடம் இளமையும், கல்வியும் இருக்கின்றன. ராஜரத்தினத்திடம் அனுபவம் இருக்கின்றது. இந்த இருவரும் சேர்ந்து கண்டி மாவட்ட தமிழ் மக்களுக்கு உரிய பிரதிநிதித்துவத்தை தருவார்கள்.  அதற்காகவே இந்த இருவரும் கண்டியில் ஐதேகவின் யானை சின்னத்தில் போட்டியிடுகின்றார்கள். 
 
20,000 முதல் 30,000 வாக்குகளை கொண்ட கேகாலை, இரத்தினபுரி மாவட்டங்களை உள்ளடக்கிய சப்ரகமுவ மாகாணத்துக்கும், ஒரு இலட்சம் தமிழ் வாக்காளர்களை கொண்ட கண்டி மாவட்டத்துக்கும் இடையில் உள்ள வித்தியாசத்தை புரிந்து கொள்ளாமல் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் செயல்படுகின்றது. கேகாலைக்கும், இரத்தினபுரிக்கும் சிலவேளைகளில் மாத்தளை மாவட்ட கள நிலைமைகள் பொருந்தி வரும். ஆனால், கண்டி மாவட்டம் என்பது கொஞ்சமும்கூட சப்ரகமுவ மாகாண மாவட்டங்களுடன் ஒப்பிட முடியாதது.
  
நடைமுறையில் உள்ள விகிதாசார தேர்தல் முறையையும் இதொகா புரிந்துகொள்ளவில்லை. கண்டியில் தேர்தல் காலங்களில் தமிழ் வாக்காளர்கள் வாக்களிக்கும் முறைமையையும் இதொகா புரிந்துகொள்ளவில்லை. பெரிய கட்சிகளுக்கு கிடைக்கும் வாக்குகளை பகிர்ந்து கொடுத்துவிட்டு, கிடைக்கும் மிகுதி வாக்குகளினால் சிலவேளை ஓர் ஆசனம் கிடைக்கும். அப்படித்தான் கேகாலையிலும், இரத்தினபுரியிலும் கிடைத்தது. சிறிய கட்சிகளுக்கு கிடைக்கும் இந்த ஆசனமும்கூட இந்தமுறை இதொகாவுக்கு கண்டியில் கிடைக்காது. கேகாலையை போல், இரத்தினபுரியை போல் இல்லாமல் கண்டியில் இந்தமுறை பல சிறிய கட்சிகள் போட்டியிடுவதை இதொகா புரிந்து கொள்ளவில்லை.    
 
கடந்தமுறை நாடாளுமன்ற தேர்தலின் போது கண்டியில் எனக்கு, யானை சின்னத்தில் சுமார் 30,000 வாக்குகள் கிடைத்தன. இந்த 30,000 வாக்காளர்களும், எதிர்வரும் மாகாணசபை தேர்தலில், யானை சின்னத்துக்கு வாக்களித்துவிட்டு, வேலு குமாருக்கும், ராஜரத்தினத்துக்கும் ஆளுக்கு ஒரு விருப்பு வாக்குகளை முறையாக வழங்க வேண்டும். இது நடைபெறுமானால் கண்டியில் இந்த முறை மாகாணசபையில் இரண்டு தமிழ் பிரதிநிதிகளை நாம் கட்டாயம் பெறலாம். இது ஒன்றே கண்டி மாவட்டத்தில் வாழும் தமிழ் வாக்காளர்கள் சிந்தித்து கடைபிடிக்க வேண்டிய வழிமுறை. யார் என்ன வந்து சொன்னாலும் அமைதியாக காது கொடுத்து கேட்டு கொள்ளுங்கள். ஆனால் செப்டெம்பர் 21ஆம் திகதி தேர்தல் அன்று யானை சின்னத்துக்கும், வேலு குமாருக்கும், ராஜரத்தினத்துக்கும் தவறாமல் வாக்களியுங்கள் என கண்டி மாவட்ட உடன் பிறப்புகளிடம் கேட்டு கொள்கின்றேன்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .