2020 ஜூன் 03, புதன்கிழமை

‘பொதுத் தேர்தலில் போட்டியிட்டு மீண்டு(ம்) வருவோம்’

Editorial   / 2019 டிசெம்பர் 02 , பி.ப. 09:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில், தமிழ் முற்போக்குக் கூட்டணி போட்டியிட்டு, வெற்றி பெற்று, மீண்டும் அமைச்சுப் பொறுப்புகளைப் பெற்று, மலையக மக்களுக்கான சேவைகளை முன்னெடுப்போம் என, தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பிரதித் தலைவரும் முன்னாள் அமைச்சருமான பி.திகாம்பரம் தெரிவித்தார். 

தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஸ்தாபகத் தலைவர் அமரர் வீ.கே.வெள்ளையனின் 48 ஆவது சிரார்த்த தின நினைவுப் பேருரை நிகழ்வு, நேற்று முன்தினம் (01), ஹட்டன் டி.கே.டபிள்யூ கலாசார மண்டபத்தில், சங்­கத்தின் தலைவர் பி.திகாம்பரம் தலைமையில் நடைபெற்றது.  

இந்நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே​, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என்று கனவு கண்ட அமரர் வெள்ளையன் உருவாக்கிய கட்சியில் தலைவராக இருப்பதில் தான் பெருமை கொள்வதாகக் கூறிய அவர், தோட்ட மக்கள் காணி, வீட்டு உரிமை பெற்றவர்களாக மாற வேண்டும் என்பதே, அமரர் வெள்ளையனின் இலட்சியமாக இருந்தது என்றும் அவர் கூறினார்.  

தான், அமைச்சராக இருந்த நான்கரை வருடங்களில், பெருந்தோட்ட மக்களுக்குச் சொந்த வீடுகளாக தனி வீடுகளை அமைத்து, கிராமங்களாக்கி, பிரதேச செயலகங்கள், பிரதேச சபைகளை அதிகரித்து, மலையகத்துக்கென தனியான அதிகார சபையை உருவாக்கிய பின்னரே, அமைச்சுப் பதவிகளைக் கையளித்ததாக அவர் கூறினார்.  

எனவேதான் தமிழ் முற்போக்கு கூட்டணி விடுத்த வேண்டுகோளை ஏற்று, ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாஸவுக்கு, நுவரெலியா மாவட்ட மக்கள் வாக்களித்தனர் என்றும் சஜித் தோல்வி கண்டாலும் எமது மக்களோ, தமிழ் முற்போக்கு கூட்டணியோ தொழிலாளர் தேசிய சங்கமோ தோல்வியடையவில்லை என்றும் அவர் கூறினார்.  

தாங்கள் அனைவரும், இன்று அமைச்சுப் பதவியில் இல்லாவிட்டாலும் மக்களுக்குத் தேவையான அபிவிருத்திப் பணிகளை செய்து காட்டியுள்ளதாகவும் எதிர்காலத்துக்குத் தேவையான அடிப்படை அதிகாரங்களையும் பெற்றுக் கொடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.  

நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில், முன்னாள் அமைச்சர் சஜித் பிரேமதாஸ தலைமையில் போட்டியிட்டு, நிச்சயம் வெற்றிபெறுவதாகக் கூறிய அவர், அமைச்சுப் பதவியை ஏற்று, தொடர்ந்தும் மக்களுக்காக சேவை செய்ய, தோல்வியிலிருந்து மீண்டு, மீண்டும் வருவேன்று என்று இன்போது அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 

X

X