2020 செப்டெம்பர் 21, திங்கட்கிழமை

‘முஸ்லிம் வாக்காளர்களின் நிலைப்பாடுகள் வரவேற்கத்தக்கவை’

Editorial   / 2020 ஓகஸ்ட் 10 , பி.ப. 06:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.செல்வராஜா

பதுளை, இரத்தினபுரி, கண்டி மாவட்டங்களில், முஸ்லிம் வாக்காளர்கள் மேற்கொண்டிருந்த நிலைப்பாடுகள் வரவேற்கத்தக்கவைகளாக இருப்பதுடன், அவ்வாக்காளர்களைப் பாராட்ட வேண்டுமென்று, பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்தகுமார் தெரிவித்தார்.

அவரது பதுளை அலுவலகத்தில், இன்று (10) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து அவர் கருத்துரைக்கையில், “முஸ்லிம் சமூகத்தினர் கடந்த காலங்களில் பெரும்பான்மையின வேட்பாளர்களுக்கே கூடுதலாக வாக்களித்து வந்தனர். ஆனால், நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில், முஸ்லிம் சமூகத்தினரின் ஆரம்ப நிலைப்பாடுகளில் மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதை அவதானிக்க முடிந்துள்ளன.

“அதனடிப்படையில், பதுளை மாவட்டத்தின் ஐக்கிய மக்கள் சக்தி சார்பாக போட்டியிட்ட எனக்கு கணிசமான முஸ்லிம் வாக்குகள் கிடைக்கப்பெற்றுள்ளன. பதுளை மாவட்டத்தில், சுமார் 10 ஆயிரம் முஸ்லிம் வாக்குகள் எனக்குக் கிடைத்துள்ளன.

“இதனாலேயே, நான் பட்டியலில் இரண்டாம் இடத்தில் வெற்றி பெற்றேன். முஸ்லிம் வாக்காளர்களின் வாக்குகள் எனக்குக் கிடைக்காத பட்சத்தில்மூன்றாவது இடத்தைப் பெற்று எமது தமிழ் மக்களின் 35 ஆயிரம் வாக்குகளோடு வெற்றி பெற்றிருப்பேன்.

“ஆகவே, எனது இரண்டாம் இட வெற்றிக்குப் பங்களிப்பை முஸ்லிம் வாக்காளர்கள் வழங்கியிருக்கின்றனரென்பதை மறுக்கவும் மறைக்கவும் முடியாது.

“சிறுபான்மைச் சமூகம் என்ற ரீதியில், முஸ்லிம் சமூகத்தினர், தமிழ் சமூகத்துடன் இணைந்து செயல்படுவது வரவேற்கத்தக்க விடயமாவதுடன், அதி சிறந்த முன்னுதாரணமுமாகும்.

“என்னைப் பொறுத்த வரையில், கடந்த நான்கான்டு கால நாடாளுமன்ற அரசியல் பணியில், முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கிய பல்வேறு விடயங்களுக்குத் தீர்வை ஏற்படுத்திக் கொடுத்துள்ளேன்.  அத்துடன், அம்மக்களின் சமூக மேம்பாடுகளுக்கென்று, நாடாளுமன்ற நிதி ஒதுக்கீடுகளையும்  மேற்கொண்டிருக்கின்றேன். இதனை முஸ்லிம் மக்கள் நன்கறிவர்” என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--