2021 மார்ச் 08, திங்கட்கிழமை

6% உயர்வை இ.தொ.கா ஏற்காது

Kogilavani   / 2016 ஜூலை 19 , மு.ப. 04:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.செல்வராஜா

ஆறு சதவீத பஸ் கட்டண உயர்வை, நல்லாட்சி அரசாங்கம் மீள்பரிசீலனை செய்ய வேண்டுமெனக் கோரியுள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், இக்கட்டண உயர்வானது மலையக மக்களுக்கு மேலும் ஒரு சுமையாக மாறியுள்ளதெனவும் சுட்டிக்காட்டியுள்ளது.

'உலகச் சந்தையில், எரிபொருளின் விலை வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், அதற்கு இணையாக பஸ் கட்டணமும் குறைக்கப்பட வேண்டும். மாறாக, இவ்வாறு கட்டணம் அதிகரிக்கப்படுவது முற்றிலும் தவறாகும்' என ஊவா மாகாண அமைச்சரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப-தலைவருமான செந்தில் தொண்டமான் கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

'மக்களது வாழ்வாதாரங்கள் பாதிப்படையாத வகையில், அத்தியாவசியப் பொருட்களின் விலைக் குறைப்பு மற்றும் சிறப்பான நலன்புரி சேவைகள் என்பன, கிரமமாகவும் முறையாகவும் முன்னெடுக்கப்பட வேண்டியது நல்லாட்சியின் கடப்படாகும்.

ஆறு சதவீத பஸ் கட்டண உயர்வானது, மக்கள் மீது, குறிப்பாக மலையக மக்கள் மீது சுமத்தப்படும் மற்றுமொரு சுமை என்பதால், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஒரு போதும் இதனை ஏற்றுக்கொள்ளாது. பஸ் போக்குவரத்தை அதிகளவில் பயன்படுத்துவது பணம் படைத்த செல்வந்தர்களோ அல்லது மேல் நிலை மக்களோ அல்ல. அன்றாட தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ளக்கூட முடியாத நிலையில் கஷ்டப்படும் ஏழை மக்களே, பஸ் போக்குவரத்தைப் பயன்படுத்தி வருகின்றனர்.   
நகர்புறங்களில் வாழ்பவர்கள், ஒரு நகரத்திலிருந்து மற்றுமொரு நகரத்துக்குச் செல்ல பஸ் மற்றும் புகையிரதச் சேவையை பயன்படுத்துகின்றனர். ஆனால், மலையக மக்கள், பஸ் போக்குவரத்தை மட்டுமே நம்பி வாழ்கின்றனர்.  

எனவே, மலையக மக்களின் வாழ்க்கைச் சுமையைக் குறைப்பதற்காக, ஆறு சதவீத பஸ் கட்டண அதிகரிப்பு தொடர்பில் உடனடியாக மறுபரிசீலனையை செய்யுமாறு, சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் மற்றும் அரசாங்கத்திடம், இ.தொ.கா கேட்டுக்கொள்கின்றது' என்று அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .