2021 மார்ச் 06, சனிக்கிழமை

வரவு – செலவுத்திட்டத்தின் நன்மைகள் தோட்டப்பகுதி மக்களுக்கும் பாரபட்சமின்றி கிடைக்க வேண்டும்: திகாம்ப

A.P.Mathan   / 2012 நவம்பர் 11 , மு.ப. 12:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.சுவர்ணஸ்ரீ)

வரவு -  செலவுத்திட்டத்தின் மூலமாக இந்த நாட்டு மக்களுக்குக் கிடைக்கக் கூடிய நன்மைகள் மலையகப் பெருந்தோட்ட மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதே எனது நோக்கமாகும் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பி.திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ள 2013ஆம் ஆண்டிற்கான வரவு – செலவுத்திட்டம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய போதே இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

அவர் ஆற்றிய உரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது...

2013 வரவு – செலவுத்திட்டத்தில் வறிய மாணவர்களுக்கு மாணவர்களின் நலன் கருதி சில திட்டங்கள் முன்மொழியப்பட்டுள்ளன. கஸ்ட பிரதேச பாடசாலை மாணவர்களுக்கு இலவசமாக தானிய உணவு, பால் மற்றும் முட்டைகளை வழங்குவதற்கும் இப்பாடசாலைகளுக்குச் செல்லும் சிறுவர்களுக்கு அரையாண்டிலும் இலவச சீருடை வழங்குவதற்கும் இலவசமாக ஒரு சோடி பாதணிகளை வழங்குவதற்கும் வரவு – செலவுத்திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ளமையை வரவேற்கின்றேன். 

இந்தத் திட்டத்தினை தோட்டப்பகுதிகளிலும் முறையாக அமுல்படுத்தி தோட்டப்பகுதிகளில் வறியநிலையில் தமது கல்வியைத் தொடர முடியாமலுள்ள மாணவர்களுக்கு உதவுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

இந்த வரவு – செலவுத்திட்டத்தில் தாய் மற்றும் சேய் மரண வீதத்தினை கட்டுப்படுத்தும் வகையில் சில முன்மொழிவுகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

குறிப்பாக நுவரெலியா மாவட்டத்தில் தாய் மற்றும் சேய் மரண வீதம் ஏனைய மாவட்டங்களைவிட அதிகமாக உள்ளதென்பதையும் இந்த மாவட்டத்தில் போசாக்குக் குறைபாடு நிலவுகின்றதென்பது குறித்தும் ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது. எனவே நுவரெலியா மாவட்ட மக்கள் மத்தியில் காணப்படுகின்ற இந்தக்குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் தோட்டப்பகுதிகளில் வறுமையை ஒழிப்பதற்கு சமூர்த்தி மற்றும் திவிநெகும திட்டங்களைத் தோட்டப்பகுதிகளிலும் முறையாக நடைமுறைப்படுத்த வேண்டும்.

பெருந்தோட்டப்பகுதியில் பெருந்தோட்டக் கம்பனிகளால் பயன்படுத்தப்படாத நிலங்கள் குத்தகைக்கு வழங்கப்படும் போது தோட்டப்பகுதிகளில் வாழுகின்ற இளைஞர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டுமென கேட்டுக்கொள்கின்றேன்.

இந்த நிலையில் இலங்கையில் பல வருடகாலமாக நிலவி வந்த இனப்பிரச்சினைக்கு ஒரு தீர்வாக முன்வைக்கப்பட்ட 13ஆவது அரசியலமைப்பு சீர்திருத்தம் 25 வருடகாலமாக நடைமுறையில் உள்ளது.
எனினும் இனப் பிரச்சினைக்கான தீர்வினை எட்டமுடியாதுள்ளது என்கின்ற யதார்த்தத்தை நாம் புரிந்துகொள்ள முடிகிறது. குறிப்பாக இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணத்திற்கு அதிகார பகிர்வதற்காக மேற்கொள்ளப்பட்ட 13ஆவது சீர்திருத்த ஏற்பாடுகள் அங்கு முழுமையாக நடைமுறைப் படுத்தப்படாமையும் அதன் மூலம் அந்த மக்கள் தமக்கான தீர்வினை அனுபவிக்க முடியாத ஒரு சூழ்நிலைமையையும் தோற்றுவித்துள்ளது.

எனினும் பிராந்திய ரீதியாக வாழுகிற மக்கள் மத்திய அரசாங்கத்திலேயே முழுவதுமாக தங்கியிருக்காமல் மாகாண சபை மூலமாகவும் அபிவிருத்தி நடவடிக்கைகளைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு 13ஆவது சீர்திருத்தம் மூலம் ஏற்பட்டது. இதேவேளை உள்ளூராட்சி அதிகாரங்களின் கீழ் பெருந்தோட்ட பகுதிகள் முழுமையாக உள்வாங்கப்படாது உள்ளது. இந்த நிலையில் பெருந்தோட்ட பகுதிகள் மாகாண சபை முறைமைகள் ஊடாக தங்களது அரசியல் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்திக்கொள்வதற்கும் அபிவிருத்தி நடவடிக்கைகளைப் பெற்றுக்கொள்வதற்குமான வாய்ப்பினை 13ஆவது அரசியலமைப்பு சீர்திருத்தமும் மாகாண சபை முறைமைகளும் உருவாக்கிக்கொடுத்தது. அண்மைக்காலமாக அரச அதிகாரிகளினாலும் சில அரசியல் தலைவர்களாலும் நடைமுறையிலுள்ள மாகாண சபை முறை இல்லாதொழிக்கப்படவேண்டும் என்ற கோஷம் முன்வைக்கப்பட்டது. அது தனியே கட்சிகளின் விருப்பங்களைக் கருதிக்கொண்டிருந்த காலகட்டத்தில் இம்முறை வரவு செலவுதிட்டத்தில் அதிமேதகு ஜனாபதியினால் முன்வைக்கப்பட்டிருக்கும் முன்மொழிவுகள் மாகாண சபை முறை மாற்றம் பெறுவதற்கான சாத்தியம் இருப்பதைக் காட்டுகின்றது. மாகாண சபை முறை மாற்றப்படுகின்ற போது தற்போது அதில் நிலவும் குறைபாடுகளை நீக்கி மக்களுக்கு மேலும் நன்மை தரக்கூடிய அதிகாரப்பகிர்வுடன் கூடிய முறைமை ஒன்றினை முன்வைப்பது அவசியமாகின்றது. குறிப்பாக பெருந்தோட்ட மக்கள் இன்னும் உள்ளூராட்சி அதிகாரங்களையே முழுமையாக அனுபவிக்க முடியாத நிலைமை காணப்படுகின்றபோது நடைமுறையிலுள்ள மாகாண சபை முறையில்  மாற்றம் செய்யப்படவுள்ளது எனும் அறிவிப்பு மக்கள் மத்தியில் ஒரு பதற்றத்தையும் அதேநேரம் எதிர்பார்ப்பினையும் தோற்றுவித்துள்ளது. எனவே எதிர்வரும் காலம் மலையக மக்கள் தொடர்பில் சவாலான தீர்மானங்களை எதிர்கொள்ளும் கால கட்டமாக அமையும்.

  Comments - 0

  • guru Sunday, 11 November 2012 02:05 AM

    சுயனலவாதி எல்லாம் தயவு செய்து மக்கள் நலனை பேச வேண்டாம்.
    ரொம்ப கேவலமா இருக்கு...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .