2021 மே 16, ஞாயிற்றுக்கிழமை

கொழும்பு மாநகர சபை தேர்தல்; ஜனநாயக மக்கள் முன்னணிக்கு புளொட் ஆதரவு

Super User   / 2011 செப்டெம்பர் 17 , மு.ப. 05:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கொழும்பு மாநகர சபை தேர்தலில் போட்டியிடும் ஜனநாயக மக்கள் முன்னணிக்கு முழுமையான ஆதரவினை வழங்குமாறு தமிழ் மக்களுக்கு புளொட் அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

புளொட் அமைப்பு விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தமிழ் மக்களின் நியாயமான உரிமைகள், அபிலாசைகள் மறுதலிக்கப்பட்டு வருகின்றது. இந்த அரசியல் சூழ்நிலையில் நடைபெறவுள்ள கொழும்பு மாநகர சபைத் தேர்தலில் தமிழ் கட்சியாக போட்டியிடும் ஜனநாயக மக்கள் முன்னணியை தமிழ் மக்கள் முழுமையாக ஆதரிப்பது அவசியமானதும் தவிர்க்கப்பட கூடாததுமாகும்.

இலங்கையில் தமிழ் மக்களுக்கு, அது வடக்கிலோ, கிழக்கிலோ, மலையகத்திலோ, தலை நகரிலோ- அநீதிகள் இழைக்கப்படும் போது அதற்கு எதிராக குரல் கொடுப்பதுடன், களத்திலிறங்கி பணியாற்றும் மனோ கணேசனையும் அவரது கட்சியையும் நடைபெறவுள்ள கொழும்பு மாநகர சபை தேர்தலில் சபை தேர்தலில் ஆதரிக்க வேண்டியது தமிழ் மக்களின் அவசிய கடமையாகும்.

கொழும்பு வாழ் தமிழ் மக்கள் தங்களின் அரசியல் இருப்பை தனித்துவத்துடன் தக்கவைத்து கொள்ளவும், தங்களுக்கான உரிமைகளை நிலை நிறுத்திக் கொள்ளவும் தமிழ் மக்களின் ஐக்கியத்தை என்றும் வலியுறுத்தி நிற்கும் ஜனநாயக மக்கள் முன்னணியை ஆதரிப்பதே சரியான தேர்வாக இருக்கும்.
 
வடக்கில் அண்மையில் நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி மன்ற தேர்தல்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மகத்தான வெற்றிக்கு தமிழ் மக்களின் ஐக்கியத்தை வலியுறுத்தி மனோ கணேசன் ஆற்றிய பங்கு அளப்பரியதும், இன்றியமையாததுமாகும் என்பதை நினைவு கூர்கின்றோம்.

தமிழ் மக்களின் உரிமைகளுக்காகவும், சுபிட்சமான வாழ்வுக்காகவும் துணிந்து தனது கருத்துக்களை அணித்தரமாக கூறியும், செயற்பட்டும் வரும் ஜனநாயக மக்கள் முன்னணியை ஆதரித்து தமிழ் மக்களின் பலத்தை நிரூபிக்க வேண்டுமென நாம் தமிழ் மக்களை வேண்டி நிற்கின்றோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .