2021 மே 06, வியாழக்கிழமை

கேப்பாப்புலவில் முருகனுக்காக படை இணக்கம்

சுப்பிரமணியம் பாஸ்கரன்   / 2017 ஜூன் 09 , மு.ப. 10:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

படையினர் வசமுள்ள கேப்பாப்புலவு வீதியைத் திறந்து, கேப்பாப்புலவு முருகன் ஆலயத்தில் விசேட வழிபாடுகளைச் செய்வதற்கு படைத்தரப்பு இணைங்கியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

வரலாற்றுச் சிறப்பு மிக்க வற்றாப்பளை கண்ணகி அம்பாள் ஆலயத்தின் வருடாந்த பொங்கலை முன்னிட்டு, இந்த விசேட பூ​ஜை வழிபாடுகள் இடம்பெறவுள்ளன.   

முல்லைத்தீவு, கேப்பாப்புலவுப் பகுதியில் படையினர் வசமுள்ள தங்களது காணிகளை விடுவிக்கக் கோரி, அந்தப்பகுதி மக்கள் முன்னெடுத்து வரும் தொடர் கவனயீர்ப்புப் போராட்டம், நேற்று வியாழக்கிழமை (08), 128ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டது.  

இதேவேளை, வரலாற்றுச் சிறப்பு மிக்க வற்றாப்பளை கண்ணகி அம்பாள் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் விழா, எதிர்வரும் 12ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெறவுள்ளது.   

இந்நிலையில், கடந்த 2009ஆம் ஆண்டுக்கு முன்னர், கேப்பாப் புலவுப் பகுதியில், தமது சொந்தக்காணிகளில் பூர்வீகமாக வாழ்ந்த மக்கள் அங்குள்ள முருகன் ஆலயத்தில் ஒவ்வொரு வருடமும் வழிபாடு செய்து வந்தனர்.  

படையினரால் ஆக்கிரமிக்கப்பட்ட பின்னர், 2009ஆம் ஆண்டிற்குப் பின்னர் குறித்த ஆலயத்தில் எந்தவிதமான வழிபாடுகளும் மேற்கொள்ளப்படுவதில்லை.   

இந்நிலையில், படையினர் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்கக்கோரி 128 நாளாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்கள், தங்களது காணிகளை வற்றாப்பளைப் பொங்கலுக்கு முன்னர் விடுவிக்குமாறு கோரியிருந்தனர். ஆனால், குறிப்பிட்ட காணிகள் இதுவரையிலும் விடுவிக்கப்படவில்லை.  

எனினும், கேப்பாப்புலவுப்பகுதியில் படையினர் ஆக்கிரமித்து வைத்துள்ள வீதியை 12ஆம்திகதி போக்குவரத்துக்காக திறக்கவும், குறித்த முருகன் ஆலயத்தில் வழிபாடு செய்யவும் படைத்தரப்பு இணங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது,  

இவ்விடயம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி சாந்தி சிறிஸ்கந்தராஜா, தொடர்புகொண்டு கேட்டபோது,  

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன், படைத்தரப்பு மற்றும் அரச அதிகாரிகளுடன் புதன்கிழமை (07) இவ்விவகாரம் தொடர்பில் பேசியுள்ளார்.  

இதன்போதே, மேற்கண்டவாறு இணக்கம் காணப்பட்டதாக அவர் தெரிவித்தார். இந்நிலையில், 127ஆவது நாளாகவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள, மக்கள் குறித்த ஆலயத்தில் இதுவரையிலும் பூசைகள் எவையும் செய்யப்படாது உள்ளது. ஆகையால், அதற்கான கிரியைகளை செய்து உரிய முறைப்படி வழிபாடு செய்வதற்கு ஒட்டுமொத்த மக்களும் அங்கே செல்வதற்கு அனுமதிக்கப்படவேண்டுமெனவும் கேப்பாப்புலவு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .