2020 டிசெம்பர் 05, சனிக்கிழமை

'சூளை மேட்டு சம்பவத்துக்கும் எனக்கும் தொடர்பில்லை'

Thipaan   / 2016 மார்ச் 06 , மு.ப. 04:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ் நாட்டின் சூளை மேட்டில், 1986ஆம் ஆண்டு நடைபெற்ற சம்பவங்களுக்கும் தனக்கும் எந்தச் சம்மந்தமும் இல்லை என்று ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

சூளைமேட்டில் நடைபெற்ற சம்பவம் தொடர்பான சென்னை செசன் நீதிமன்றத்தில் நேற்று நடைபெற்ற வழக்கு விசாரணையில் இலங்கையிலுள்ள இந்தியத் தூதரகத்திலிருந்து காணொளி மூலமாக சமூகமளித்துவிட்டு வருகை தந்தபோது, ஊடகவியலாளர்கள் கேள்விகளை முன்வைத்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

1986ஆம் ஆண்டு சூளைமேட்டில் ஈ.பி.ஆர். எல்.எப் உறுப்பினர்களுக்கும், உள்ளுர்வாசிகளுக்குமிடையே சச்சரவொன்று நடைபெறுவதாக ஈ.பி.ஆர்.எல்.எப். அலுவலகத்திலிருந்து கிடைக்கப் பெற்ற தகவலைத் தொடர்ந்தே அந்த இடத்துக்குச் சென்றிருந்தேன்.

பொலிஸாரின் வழக்குத் தாக்கலிலும், அந்த வழக்கில் கூட அந்தச் சம்பவம் நடந்து முடிந்த பின்னரே அந்த இடத்துக்கு வருகை தந்ததாகவே குறிப்பிடப்பட்டுள்ளது. அதை அடிப்படையாக எடுத்துக் கொண்டு, கொலைக் குற்றச்சாட்டிலிருந்தும், அங்கு கலகம் விளைவித்ததாக குற்றம்  சுமத்தப்பட்டிருப்பதிலிருந்தும் விடுவிக்க வேண்டும் என்று எனது வழக்கறிஞர் வாதங்களை முன்வைத்திருந்தார்.

தமிழக அரசு சார்பில் முன்னிலைப் படுத்தப்பட்ட நான்கு சாட்சிகளில் மூவர் என்னை அடையாளம் காட்ட முடியவில்லை என்று கூறியிருக்கின்றார்கள். ஒருவர் மட்டும் நான் அந்த சம்பவத்தில் காயமடைந்தவரை ஏற்றிச் சென்ற முச்சக்கர வண்டி மீது மேல் மாடியிலிருந்து துப்பாக்கியால் சுட்டதாகத் தெரிவித்துள்ளார்.

இதே சாட்சியானவர் முன்னர் ஒரு தடவை சாட்சியமளிக்கும்போது, நான் சம்பவத்தின் போது நான்கு பேருடன் சேர்ந்து கீழே இருந்து சுட்டதாகத் தெரிவித்திருந்தார். என்பது குறிப்பிடத் தக்கதாகும்.

எனவே, சூளைமேட்டில் நடந்த சம்பவத்துக்கும் எனக்கும் எந்தச் சம்பவமும் இல்லை. ஆனால் இங்கே சில ஊடகங்கள் இச் சம்பவம் தொடர்பில் மாறுபட்ட செய்திகளை வெளியிடுவது கவலையளிக்கின்றது.

எனவே எதிர்காலத்திலாவது என்னை தொடர்புபடுத்தி செய்திகளை வெளியிடுவதற்கு முன்னர் என்னுடன் தெளிவு படுத்திக் கொண்டு வெளியிட்டு உதவுமாறு நான் ஊடகங்களைக் கேட்டுக் கொள்கின்றேன் என்று தெரிவித்த அவர், சாட்சியங்களை கேட்டுக்கொண்ட நீதிபதி அரச தரப்பு குறிப்பிட்ட ஐந்து சாட்சிகளில் மேலும் ஒருவர் அடுத்த தினத்தில் சமூகமளிக்க வேண்டுமென்பதை சுட்டிக்காட்டியதோடு வழக்கை இம்மாதம் 15ஆம் திகதி ஒத்திவைத்துள்ளார் என்றும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .