2021 ஏப்ரல் 18, ஞாயிற்றுக்கிழமை

‘நல்லாட்சியிலும் இனவாதம் தூண்டப்படுவது கவலைக்குரியது’

Editorial   / 2017 மே 27 , பி.ப. 01:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

நல்லாட்சியிலும் இனவாதம் தூண்டப்படுவது கவலைக்குரியது என சுட்டிக்காட்டியுள்ள சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஐயகலா மகேஸ்வரன், நல்லாட்சி அரசாங்கமானது இன, மத பேதமின்றிச் செயற்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

வல்வை ஆழிக்குமரன் நினைவாக வல்வெட்டித்துறையில் நீச்சல் தடாகமொன்று அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துகொண்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“யுத்தம் காரணமாக எமது இளைஞர், யுவதிகள் தமது திறமைகளை வெளிக்காட்ட முடியாத நிலைமை நிலவியது. தற்போது நல்லாட்சி அரசாங்கக் காலத்தில் அந்த நிலைமை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதனால் எமது இளைஞர், யுவதிகள் எதிர்காலத்தில் வீர சாதனைகளை ஆழிக்குமரன் ஆனந்தனைப்போன்று படைக்க வேண்டும்.

“வடக்கில் யுத்தம் காரணமாக பல தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை, பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை, உப்பளம், உட்பட பல தொழிற்சாலைகள் மூடப்பட்டிருக்கின்றன. இவற்றைத் திறப்பதற்கு நிதி அமைச்சு புதிய நிதி ஒதுக்கீடுகளை வழங்கவேண்டும்.

 

“வலிகாமம் வடக்கு மக்கள் உட்பட பெருமளவான மக்கள் இன்னமும் முகாம்களில் வாழ்கின்றனர். கடந்த வருடம் வெளிநாட்டலுவல்கள் அமைச்சராக இருந்தபொழுது அமைச்சர் மங்கள சமரவீர யாழ். மாவட்டத்துக்கு விஜயம் செய்திருந்தார். இதன்போது முகாம்களில் உள்ள மக்களையும் அவர் சந்தித்திருந்தார்.

“எனவே, இந்த மக்களின் மீள் குடியேற்றத்துக்கும் அபிவிருத்திக்கும் உரிய நிதி ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்படவேண்டும். யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும்” என்றார்.

“நல்லாட்சி அரசாங்கம் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் அரசுக்கு எதிராக இனவாதம் தூண்டப்படுகின்றது. கடந்த அரசாங்க காலத்தில் பொதுமக்களின் காணிகள் சுவீகரிக்கப்பட்டன. தவிர அவை மீளவும் வழங்கப்படவில்லை. ஆனால் நல்லாட்சி அரசாங்கம் மக்களின் காணிகளை மீள வழங்க நடவடிக்கை எடுத்து வருகின்றது. மேலும் 3,000 ஏக்கர் காணிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கின்றது” எனத் தெரிவித்தார்.

“பெரும் பாதிப்புகளை சந்தித்த ஊடகவியலாளர்களுக்கு உரிய வசதிகள் செய்துகொடுக்கப்படவேண்டும். கடன் அடிப்படையில் அவர்களுக்கு நிதி உதவிகளை வழங்கவேண்டும். வடக்கில் உயிரிழந்த ஊடகவியலாளர்களின் நினைவாக நினைவுத்தூபி அமைக்கப்படவேண்டும்.

வடக்கில் பாடசாலைகள், அடிப்படை வசதிகளின்றி இயங்கி வருகின்றன. பாடசாலைகளின் அபிவிருத்திக்கு உரிய நிதி வழங்கப்பட வேண்டும்” எனவும் குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .