2020 ஒக்டோபர் 30, வெள்ளிக்கிழமை

‘பொலிஸ் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கவும்’

Editorial   / 2018 செப்டெம்பர் 11 , பி.ப. 07:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எஸ். நிதர்ஷன்

வவுனியா, கனகராயன்குளம் பகுதியில் தமிழ்க் குடும்பம் ஒன்றின் மீது மிலேச்சத்தனமான தாக்குதல் நடாத்திய பொலிஸ் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தாக்குதலுக்குள்ளான குடும்பஸ்தருக்கு மாட்டப்பட்டுள்ள கை விலங்கை அகற்ற வேண்டுமென்றும் வட மாகாண சபையின் இன்றைய அமர்வில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதற்கான நடவடிக்கையை எடுக்கும் வகையில் முதலமைச்சர் உடனடியாக பொலிஸ் தலைமை அதிகாரிகளுடன் பேச வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட குடும்பஸ்தருக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்க வேண்டுமென்றும் கோரி வட மாகாண சபை அவைத் தலைவர் சீ.வி.கே. சிவஞானம், முதலமைச்சரின் இணைப்பாளரின் கவனத்துக்குகு கொண்டு வந்துள்ளார்.

வட மாகாண சபை உறுப்பினர் சபா. குகதாஸன், கனகராயன்குளத்தில் தமிழ்க் குடும்பம் மீது பொலிஸ் அதிகாரி ஒருவர் மேற்கொண்ட மிலேச்சத்தனமான தாக்குதல் குறித்து விசேட கவனயீர்ப்பு ஒன்றை இன்று நடைபெற்ற வட மாகாண சபையின் 131ஆவது அமர்வில் முன்வைத்தார்.

விசேட கவனயீர்ப்பை முன்வைத்து குகதாஸன் கூறுகையில்,

“சிவில் உடையில் நின்ற பொலிஸ் அதிகாரி ஒருவர் பொதுமகன் மீதும் அவருடைய மனைவி, பிள்ளைகள் மீதும் தாக்குதல் நடாத்தியுள்ளார். இது மோசமான செயலாகும். தாக்குதலுக்குள்ளான பெண் பிள்ளை தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். இவ்வாறான மிலேச்சத்தனமான சம்பவங்கள் இனிமேல் இடம்பெறாமல் இருக்கவும்ரூபவ் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பதற்கும் உடனடியாக சட்டம் ஒழுங்கு அமைச்சர் என்றவகையில் முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கோரினார்.

தொடர்ந்து மாகாண சபை உறுப்பினர் ப. சத்தியலிங்கம் கூறுகையில், “குறித்த தாக்குதல் சம்பவத்தின் அடிப்படை காணிப் பிரச்சினையாகும். அது நீதிமன்றில் வழக்கில் உள்ளது. இவ்வாறான காணிப் பிரச்சினையில் ஒரு பொலிஸ் அதிகாரி சிறுவர்கள் உட்பட ஒரு குடும்பத்தையே அடித்து சித்திரவதை செய்து வைத்தியசாலையில் சேர்க்கவேண்டிய தேவை என்ன உள்ளது.

அதுவும் சிவில் உடையில் வந்து வீட்டில் வைத்து தாக்கிவிட்டு பின்னர் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று அங்கும் வைத்து தாக்கிவிட்டு மதுபோதை எனக் கூறி வைத்தியசாலையில் சேர்த்துள்ளார்.

குறித்த பொலிஸ் அதிகாரி மீது ஏராளமான குற்றச்சாட்டுக்கள் மக்களிடமிருந்து எங்களுக்கு கிடைக்கப் பெற்றுள்ளன. ஆயினும் எதற்குமே நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே இந்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு

குறித்த பொலிஸ் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த சி.வி.கே சிவஞானம், சட்டம் ஒழுங்குக்கு பொறுப்பான முதலமைச்சர் சபையில் இல்லை. ஆயினும் முதலமைச்சரின் இணைப்பாளர் பார்வையாளர் அறையில் இருக்கும் நிலையில் அவர் இந்த விடயத்தை உடனடியாக முதலமைச்சருடைய கவனத்துக்கு கொண்டு சென்று தாக்குதல் நடாத்திய பொலிஸ் அதிகாரி மீது நடவடிக்கை எடுப்பதற்கும் தாக்குதலுக்குள்ளான குடும்பஸ்தருக்கு வைத்தியாலையில் மாட்டப்பட்டுள்ள கை விலங்கை அகற்றுவதற்கும் நடவடிக்கை எடுக்குமாறு கோரினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--