2021 மே 09, ஞாயிற்றுக்கிழமை

மீள்குடியேறும் குடும்பங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

Princiya Dixci   / 2015 ஒக்டோபர் 01 , பி.ப. 01:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எஸ்.குகன்

வலிகாமம் கிழக்கு பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட வளலாய் பகுதியில் மீள்குடியேற அனுமதிக்கப்பட்ட பகுதியில் மீளக்குடியேறும் குடும்பங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. அவர்களுக்கான உதவிகள் மற்றும் வசதிகளை ஏற்படுத்துவதில் காலதாமதம் ஏற்பாட்டாலும் அனைத்தும் செய்து தரப்படும் என வலிகாமம் கிழக்கு (கோப்பாய்) பிரதேச செயலர் ம.பிரதீபன் தெரிவித்தார்.

வளலாய் கடற்கரையில் நீர்ப்பிட்டி சித்திர வேலாயுதர் சுவாமி கோயிலுக்கு அருகில் 1.3 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட அந்தியேட்டி மண்டபத்தின் திறப்பு விழா, இன்று வியாழக்கிழமை (01) நடைபெற்றது.

அதில் கலந்துகொண்டு மண்டபத்தைத் திறந்து வைத்த பிரதேச செயலர் அங்கு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,

வளலாய் பகுதியில் ஆரம்பத்தில் 272 குடும்பங்கள் மீளக்குடியமர்வதற்கு பதிவு செய்திருந்து, பின்னர் 310 ஆக அதிகரித்துள்ளது. ஒவ்வொருவரும் தமது சொந்த நிலத்தில் குடியேறி வாழ்வதையே விரும்புகின்றனர். இது அவர்களின் உரிமையுமாகும்.

யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வளலாய்க்கு விஜயம் செய்து பார்வையிட்டதோடு மக்களின் தேவைகளை நேரடியாக அறிந்து கொண்டார். மீளக்குடியேறிய குடும்பங்களுக்கான வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. 31 தற்காலிக வீடுகள் அமைக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் மேலும், ஒரு தொகுதி வீடுகள் அமைக்கப்படவுள்ளன. பாதுகாப்பு அரண்கள் அழிக்கப்பட்டு நிலம் சீர்செய்யப்பட்டுள்ளது. 14 கிணறுகள் துப்புரவு செய்யப்பட்டுள்ளன. இரண்டு பொதுக் கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன.

குடியேறிய மக்களுக்கான வசதிகளைச் செய்வதில் தாமதம் நிலவினாலும் வசதிகளைச் செய்வதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். இது தொடர்பாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபரின் நேரடிக் கவனத்துக்கு கொண்டு வந்து வலியுறுத்தி வருகின்றோம். பல தொண்டு நிறுவனங்கள் உதவி செய்ய முன்வந்துள்ளன என்றார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X