2021 பெப்ரவரி 27, சனிக்கிழமை

யாழில் தொடரும் துப்பாக்கி சூடு: ‘பின்னணியை ஆராய வேண்டும்’

Editorial   / 2017 ஜூலை 23 , பி.ப. 03:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க.அகரன்

“யாழ்ப்பாணத்தில் துப்பாக்கிச் சூடு இடம்பெறுவதைப் பார்க்கின்றபோது, இதன் பின்னணியை உன்னிப்பாக ஆராய வேண்டியுள்ளது” என, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சிவசகத்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

"நல்லாட்சி அரசாங்கம் உருவாவதற்கு, எத்தகைய நிபந்தனைகளையும் விதிக்காமல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவளித்தது. ஆனால், தற்பொழுது நடைபெறுகின்ற விடயங்களை அவதானிக்கையில், தீட்டிய மரத்தையே பதம் பார்ப்பதுபோன்ற உணர்வை ஏற்படுத்துகின்றது.

"யுத்தம் முடிவடைந்து எட்டு ஆண்டுகள் கழிந்து விட்ட நிலையில், இதுவரை காலமும் அமைதிப் பூங்காவாகத் திகழ்ந்துவரும் வட மாகாணத்தில், அண்மைய நாட்களில் இடம்பெறும் நடவடிக்கைகள், கவலையளிப்பனவாக உள்ளன. இந்தச் சம்பவங்கள் கண்டனத்துக்குரியவை.

"பல்கலைக்கழக மாணவர்கள்மீது நடைபெற்ற துப்பாக்கிச்சூடு,  மணல் ஏற்றிவந்த வாகனம் நிறுத்தாமல் சென்றமைக்காக நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு, வடமராச்சியில் கடந்த வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு இவை அனைத்துக்கும் சிகரம் வைத்தாற்போன்று, கடந்த சனிக்கிழமை மாலை, நல்லூர் ஆலய சூழலில், யாழ். மேல்நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனை இலக்குவைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு என்பவை, எமக்கு பாரிய அச்சத்தையும் சந்தேகத்தையும் எழுப்பியுள்ளன.

"மணல் கொள்ளையர்களையும் சட்டவிரோத போதைப்பொருட்களை இலங்கைக்குக் கடத்தி விற்பனை செய்துவரும் நிழலுலக மாபியாக்களையும் கண்டறிந்து சட்டத்தின்முன் நிறுத்தி தண்டனை பெற்றுத்தர முடியாதளவுக்கு பொலிஸார் செயற்படுகின்றனரா, அல்லது அவர்களது கைகள் கட்டப்பட்டுள்ளனவா என்ற கேள்விகள் எழுகின்றன.

"யாழ்ப்பாணத்தில் துப்பாக்கிச் சூடு இடம்பெறுவதைப் பார்க்கின்றபோது, இதன் பின்னணியை உன்னிப்பாக ஆராய வேண்டியுள்ளது. பத்து பேருக்கு ஓர் இராணுவத்தினர், எந்த விதத்திலும் எம்மக்களுடன் தொடர்பு இன்றி செயற்படும் பொலிஸார் ஆகியோர் கடமையாற்றுகின்ற பிரதேசத்தில், இத்தகைய சம்பவங்கள் எவ்வாறு நிகழ்கின்றன?

"1983ஆம் ஆண்டு ஜூலை கலவரத்துக்கு வித்திட்ட அதே நாளில், நீதியரசரின் வாகனத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடைபெற்றுள்ளது. இதனைப் பார்க்கும்போது, இதில் ஏதோ உள்நோக்கம் இருக்குமோ என்று எண்ணத்தோன்றுகின்றது” எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .