2021 ஏப்ரல் 11, ஞாயிற்றுக்கிழமை

வடக்கிலுள்ள காணிகளை சிங்களவர் வாங்கலாம்: ஆளுநர் குரே

Gavitha   / 2016 மார்ச் 30 , மு.ப. 03:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

சொர்ணகுமார் சொரூபன்

'தமிழர்கள், வெள்ளவத்தையில் காணிகள் வாங்கி அங்கு குடியேறி குட்டித் தமிழகம் அமைத்து வாழ்ந்து வருகின்றார்கள். அதுபோல, வடக்கிலும் சிங்களவர்கள் காணிகள் வாங்கலாம்' என்று, வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்தார்.

சர்வோதயம் அமைப்பின் யாழ்ப்பாண அலுவலக ஏற்பாட்டிலான சர்வதேச மகளிர் தின நிகழ்வு, நாவலர் வீதியில் அமைந்துள்ள சொர்ணாம்பிகை மண்டபத்தில், நேற்றுச் செவ்வாய்;க்கிழமை (29) நடைபெற்றது.

அதில் கலந்துகொண்ட ஆளுநர், நிகழ்வு முடிந்து வெளியில் வந்தபோது, 'அத்துமீறிய சிங்களக் குடியேற்றம், நில ஆக்கிரமிப்பு என்பவற்றுக்கு

எதிராக வடமாகாண சபையில் பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது. அது தொடர்பில் உங்கள் நடவடிக்கை என்ன?' என ஊடகவியலாளர்கள் சிலர் கேள்வி எழுப்பினர். இதற்குப் பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது குறித்து தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், 'வடமாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணை, இன்னமும் எனக்குக் கிடைக்கவில்லை. அந்தப் பிரேரணை கிடைக்கப்பெற்ற பின்னர், அது தொடர்பில் கதைக்க முடியும். எங்கள் நாட்டில் உள்ள சட்டத்தின் பிரகாரம், பணம் இருந்தால் எவரும் எங்கும் காணிகளை கொள்முதல் செய்யமுடியும். விற்பவர் விரும்பினால், எவரும் எந்தப் பிரதேசத்திலும் காணிகளை கொள்முதல் செய்ய முடியும். அது, ஆக்கிரமிப்பு என்று அர்த்தப்படாது' என்றார்.

'முன்னர் பதவியிலிருந்த ஆளுநர்களுக்கும் வடமாகாண சபைக்கும் முரண்பாடுகள் இருந்தன. உங்களுக்கும் வடமாகாண சபைக்கும் எவ்வாறான உறவு உள்ளது?' என்ற  கேள்விக்குப் பதிலளித்த ஆளுநர், 'வடமாகாண சபையும் நானும் நல்ல நண்பர்கள். எங்களுக்குள் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் இருக்கின்றது. அவர்கள், தங்கள் அரசியலை செய்யட்டும், நான் எனது கடமையைச் செய்கின்றேன்' என்றார்.

இதேவேளை, யாழ்ப்;பாணத்தில் அதிகரித்துள்ள கஞ்சாக் கடத்தல் தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர், 'இந்தியாவுக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையிலான தூரம் குறைவாக இருப்பதால், இந்தியாவிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு கஞ்சாக் கடத்தல் இலகுவாக இடம்பெறுகின்றது. பொதுமக்களின் ஒத்துழைப்பு இருந்தால் மாத்திரமே, இதனை முழுவதுமாக கட்டுப்படுத்த முடியும்' என்றார்.

'கடற்படையினரும் பொலிஸாரும், கஞ்சாக் கடத்தலை கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், பொதுமக்களின் தகவல்கள் இல்லாமல் அவர்களால் கட்டுப்படுத்த முடியாது. தகவல்களை, பொதுமக்களே வழங்க வேண்டும். சரியான தகவல்கள் இல்லாமையால் கஞ்சாக் கடத்தலில் பின்னணியில் இருக்கின்ற பெரிய ஆட்களைப் பிடிக்க முடியாதுள்ளது' என்று அவர் மேலும் கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .