2021 மார்ச் 07, ஞாயிற்றுக்கிழமை

வடமாகாண சபையின் நினைவேந்தல் நிகழ்வு

George   / 2016 மே 17 , மு.ப. 06:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

வட மாகாணசபை ஏற்பாடு செய்துள்ள நினைவேந்தல் நிகழ்வு,            முள்ளிவாய்க்காலில் நாளை நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பில் முதலமைச்சர் அலுவலகத்தால் செய்திக் குறிப்பொன்று இன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

'2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதி இலங்கை தமிழரின் வரலாற்றில் மறக்க முடியாத நாள். சர்வதேச யுத்த விதிகளைப் புறந்தள்ளி கொத்துக் கொத்தாக எமது உறவுகளைக் கொன்றொழித்த இறுதி நாள். தமிழரின் வரலாற்றில் இரத்தக்கறை படிந்த நாள். இந்நாளை எமது தமிழ் மக்கள் இரத்தசரித்திரம் எழுதிய துக்கதினமாக வரலாறு உள்ளவரை அனுஷ்டிக்க வேண்டும்.

கடந்த 2015ஆம் ஆண்டில் வடக்கு மாகாண சபையின் ஏற்பாட்டில் யுத்தத்தில் படுகொலை செய்யப்பட்ட அனைவருக்குமாக நினைவேந்தல் நிகழ்வு முள்ளிவாய்க்காலில் நடைபெற்றது. 

இம்முறையும் மே மாதம் 18ஆம் திகதி இவ்வாறான நிகழ்வை அனுஷ்டிப்பதற்கான ஒழுங்குகள் வடக்கு மாகாண சபையினால் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்காக மாகாண முதலமைச்சர் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதுடன் இதில் அமைச்சர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர்.

மே மாதம் 18ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை முள்ளிவாய்க்காலில் அனுஷ்டிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அத்துடன், வட மாகாணத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மத வழிபாட்டுத்தலங்களிலும் காலை 6.00 மணிமுதல் 9.00 மணிவரையான காலப்பகுதியில் யுத்தத்தின் போது படுகொலை செய்யப்பட்டவர்களின் ஆத்மசாந்திக்காக பிரார்த்தனைகளில் மக்கள் ஈடுபடவேண்டும்.

காலை 9.00 மணி தொடக்கம் 10.00 மணிவரை முள்ளிவாய்க்கால் கிழக்கு பாடசாலைக்கு அருகில் நினைவேந்தல் நிகழ்வுக்கான ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன. இதில் மாகாண முதலமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை அமைச்சர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், மதப்பெரியார்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொள்வார்கள்.

இதன்போது யுத்தத்தில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கான ஆத்மசாந்திப் பிரார்த்தனை, மலரஞ்சலி செலுத்துதல், தீபமேற்றுதல் போன்ற நிகழ்வுகள் நடைபெறும். விசேட நிகழ்வு 10.00 மணிவரை நடந்தாலும் மாலை 5.00 மணிவரை மேற்படி நிகழ்வுகள் நடைபெறுவதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.

நிகழ்வில் கலந்து கொள்ளும் பொதுமக்களின் நன்மைகருதி. முல்லைத்தீவு பஸ் நிலையத்திலிருந்து முள்ளிவாய்க்கால் வரை விசேட போக்குவரத்து ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன' என அந்த செய்திக் குறிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .