2021 ஏப்ரல் 23, வெள்ளிக்கிழமை

வெயிலால் மயங்கி வீழ்ந்தவர் உயிரிழப்பு

Gopikrishna Kanagalingam   / 2016 மார்ச் 27 , மு.ப. 03:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

- செல்வநாயகம் கபிலன்

தற்போது நிலவும் அதிக வெப்பம் காரணமாக மயங்கி வீழ்ந்து, யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த முதியவர், நேற்றுச் சனிக்கிழமை (26) உயிரிழந்துள்ளதாக கோப்பாய்ப் பொலிஸார் தெரிவித்தனர். மருதுநகர் கிளிநொச்சி பகுதியினை சேர்ந்த அஞ்சலிங்கம் தர்மதேவா (வயது 60) என்ற ஒய்வுபெற்ற பஸ் நடத்துநரே இவ்வாறு வெப்பப் பாதிப்பினால் உயிரிழந்துள்ளதாக கோப்பாய் பொலிஸார் கூறினர்.

கடந்த 15ஆம் திகதி, கிளிநொச்சியில் இருந்து யாழ்ப்பாணத்தில் உள்ள உறவினர் ஒருவரைப் பார்க்க வந்த இவர், உறவினர் ஒருவரின் சைக்கிளில் திருநெல்வேலி சந்திப்பகுதியில் உள்ள வர்த்தக நிலையத்துக்கு, அன்று மதியம் வந்துள்ளார்.

வெயில் கொடுமை தாங்கிக் கொள்ளமுடியாமல், வீதியின் அருகில் உள்ள கடை ஒன்றில் ஒதுங்கி நின்று களைப்பாறியுள்ளார். எனினும் அவர், கடையின் முன் மயங்கி வீழ்ந்துள்ளார்.

உடனடியாக யாழ் போதனா வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் மேற்படி முதியவர் உயிரிழந்துள்ளதாக கோப்பாய் பொலிஸார் கூறினார்.

வைத்தியசாலையின் திடீர் மரணவிசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் விசாரணைகளை மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனையின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X