Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 12, சனிக்கிழமை
Menaka Mookandi / 2010 செப்டெம்பர் 13 , மு.ப. 06:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
(சரண்யா)
இலங்கையில் பல்வேறு சிறைச்சாலைகளிலுமுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் பெற்றோர் தங்கள் பிள்ளைகளை விடுவிக்கக் கோரி ஜனாதிபதி அவர்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர். அந்த கடிதத்தில், "ஜனாதிபதி அவர்களே, கடந்த காலத்தில் நாட்டில் நிலவிய யுத்த சூழ்நிலையின் போதும் அதன் பிற்பாடும் பல்வேறு காரணங்களுக்காக பயங்கரவாதம் மற்றும் அவசரகால சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு இலங்கையின் பல்வேறு சிறைச்சாலைகளிலும் எமது பிள்ளைகள் மிக நீண்ட காலமாக துயரங்களை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களைப் பிணையிலோ அல்லது பொது மன்னிப்பிலோ விடுதலை செய்து எமது வாழ்வில் வசந்தம் மலர வையுங்கள்.
தாங்கள் வடக்கின் வசந்தம், கிழக்கின் உதயம் என பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறீர்கள் கடந்த முப்பது வருடங்களுக்கு மேலாக நடைபெற்ற யுத்தத்தில் நாம் பாதிக்கப்பட்டு எமது அனைத்தையும் இழந்துபோய் உள்ள நிலையிலும் கூட எமக்கு நல்ல எதிர்காலம் உதயமாகும் என்று தங்களின் நல்லெண்ண நடவடிக்கை ஊடாக எதிர்பார்த்துக் காத்திருக்கின்றோம். நாங்கள் உங்களில் மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கின்றோம்.
யுத்தம் முடிந்துவிட்டது நின்மதியாய் இருப்போம் என்று நினைக்கும்போது எமது பிள்ளைகள் சிறையில் நீண்ட காலமாய் எவ்வித முடிவுமின்றி ஒன்று தொடக்கம் பதினெட்டு வருடங்களாய் தடுத்து வைக்கப்பட்டுள்ளதை நினைக்கும்போது நாம் இனி உயிர்வாழ்வது ஏன்? என்ற விரக்தியுடனும் எமது பிள்ளைகளின் எதிர்காலத்தையும் எண்ணியெண்ணி உயிர் வாழ்கின்றோம்.
நாளாந்தம் கண்ணீரும் கவலைகளுமே எமக்கு சொந்தமாகி விட்டன. உடமைகளை இழந்த நாம் எமது உறவுகளையும் இழந்து விடுவோமா? என எண்ணத்தோன்றுகின்றது. நிவாரணக் கிராமங்களிலும் மர நிழல்களிலும் வீதி ஓரங்களிலும் நின்று எமது பிள்ளைகளுக்கு எப்போது விடுதலை கிடைக்குமென எதிர்பார்த்து காத்திருக்கின்றோம்.
பிள்ளைகளைக் காணாது பெற்றோரும் பெற்றோரைப் பிரிந்த பிள்ளைகளும் கணவனைக் காணாது மனைவியும் யாருடைய ஆதரவுமின்றி அனாதைபோல் அன்றாட செலவுகளையே சமாளிக்க முடியாமல் உழைத்துத்தர யாரும் இல்லாமல் பிச்சை எடுக்கும் நிலையியேயே குடும்பம் நடாத்துகின்றோம். சிறையில் வாடும் தாய் தந்தையரின் அரவணைப்பின்றி அவர்களின் பாசத்துக்காக ஏங்கும் எம் குழந்தைகளின் ஏக்கங்களைப் புரிந்துகொள்ளுங்கள்.
சிறு வயதில் ஒரு குழந்தைக்கு தாய் தந்தையரின் அன்பும் அரவணைப்பும் எவ்வளவு முக்கியம் என்பது தங்களுக்கும் புரியும். வயதான பெற்றோரும் அவர்களின் கடைசிக் காலத்தின் ஆறுதலுக்கும் அவர்களைப் பராமரிக்கக்கூட யாருமில்லாமல் மன அழுத்தங்களுடன் எம்மிடத்தில் வாழ்கின்றனர்.
எங்கள் குடும்பங்களின் எதிர்காலம் எமது பிள்ளைகளின் கையில் தங்கியிருக்கையில் எம் பிள்ளைகளின் எதிர்காலமே கேள்விக்குறியாகியுள்ளது. இந்நிலையில் எங்கள் குடும்பங்களின் எதிர்காலம் என்னவாவது? எங்கள் நிலமையை எண்ணிப் பாருங்கள்.
கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் தமிழ் கைதிகளில் குற்றமற்றவர்களை உடன் விடுதலை செய்யவும் வழக்குத்தாக்கல் செய்யப்பட வேண்டியவர்களை பிணையில் விடுவிக்கவும் நடவடிக்கை சட்டமா அதிபர் தெரிவிப்பு என செய்தி வெளியாகி இருந்தது. ஆனால் தற்போது தேர்தல் முடிந்து பல மாதங்களாகியும் யுத்தம் முடிந்து ஒரு வருடத்திற்கு மேலாகியும் எமது பிள்ளைகளுக்கு விடுதலை எதுவும் வழங்கப்பட வில்லை. அவர்களுக்கு பிணையும் கிடைக்கவில்லை. கைதிகளின் பெற்றோர்களாகிய நாம் மிகுந்த வருத்தத்துடனும் வேதனையுடனும் விரக்தியான மன நிலையிலேயே இந்த கடிதத்தை அனுப்பி வைக்கின்றோம்.
இதற்கு முன்பும் பல கடிதங்களை தங்களுக்கு அனுப்பி இருந்தோம் தாங்கள் நல்ல முடிவைத் தெரிவிப்பீர்கள் என்ற எண்ணத்தில் மீண்டும் இக்கடிதத்தை எழுதுகின்றோம். தயவு செய்து எமது பிள்ளைகளை பொது மன்னிப்பில் அல்லது பிணையிலாவது விடுதலை செய்வதற்கு ஆவன செய்யுங்கள்" என்று அந்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இக்கடிதத்தின இணைப் பிரதிகள் நீதி அமைச்சு சிறைச் சாலைகள் அமைச்சு, சட்டமா அதிபர் ஆகியோருக்கும் அனுப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
49 minute ago
53 minute ago