2020 நவம்பர் 29, ஞாயிற்றுக்கிழமை

இந்த நாடு தனி சிங்கள நாடல்ல; யாழ்ப்பாணத்தில் அமைச்சர் எஸ்.பி

Menaka Mookandi   / 2010 நவம்பர் 18 , மு.ப. 03:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இந்த நாடு தனியே சிங்கள நாடென்று ஒருபோதும் கூற முடியாது. தமிழர், சிங்களவர், முஸ்லிம், மலாயர், பறங்கியர் என எல்லோருக்கும் உரிய நாடு என்றும், இந்த நாட்டில் வாழும் எல்லா மக்களும் எல்லா மொழிகளையும் கற்க வேண்டும்.

இதனால் எமக்குள் இருக்கின்ற மொழி, மதம், இனம் என்ற வேறுபாடுகளைக் களைந்து சகோதரத்துவத்துடன், புதியதொரு உலகை நோக்கிப் பயணிப்போம் என்று உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

யாழ். பல்கலைக்கழகத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற உலக மாணவர் இளைஞர் விழாவை முன்னிட்டு நடைபெற்ற முன்னோடி கலந்துரையாடலில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அமைச்சர், 'சமாதானம், நட்புறவு, சமுதாய மாற்றம், என்பவற்றுக்காக ஏகாதிபத்தியத்தை முறியடிப்போம் என்ற தொனிப்பொருளின் கீழ் இந்த நிகழ்வு முன்னெடுக்கப்படவுள்ளது. தென்னாபிரிக்காவில் நடைபெறவுள்ள 17வது உலக மாணவர், இளைஞர் மாநாட்டிற்காக இலங்கையிலிருந்து 200 பேரை அனுப்பத் திட்டமிட்டுள்ளோம்.

வடக்கு, கிழக்குப் பகுதிகளில் கடந்த 30 ஆண்டுகளாக நீடித்த போரினால் மக்கள் உயிர்களையும், உடமைகளையும், உடல் உறுப்புக்களையும் இழந்து நிர்க்கதியான நிலைக்குத்தள்ளப்பட்டுள்ள அந்த அனர்த்தத்திற்கு நாம் யாவரும் பொறுப்புக் கூற வேண்டியவர்களாக இருக்கின்றோம்.

இப்போது போர் நிறுத்தப்பட்டு அமைதிச் சூழல் நிலவும் இந்நிலையில் வடபகுதி மாணவர்களுடன் இலங்கையில் வாழும் பௌத்த, முஸ்லிம், பறங்கியர் என்ற வேறுபாடுகள் இல்லாமல் அனைவரும் சகோதரத்துவத்துடன் ஒன்றிணைய வேண்டுமென்பதும் எமது விருப்பமாகும்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் எண்ணத்தின் பிரகாரம் இந்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தை ஒரு உயர்வான நிலைக்கு கொண்டு செல்ல வேண்டுமென்பதையும் இந்த விடயத்தில் அவர் மிகுந்த அக்கறையாக உள்ளார்.

உலகின் பல்வேறு பாகங்களிலும் உள்ள பல்கலைக்கழங்களின் கல்வித் தரத்திற்கு மேலாக இலங்கைப் பல்கலைக்கழக கல்வித் தரத்தை கொண்டு வருவதற்காக ஜப்பான், சீனா உள்ளிட்ட நாடுகளுடன் பேச்சுக்களை நடத்தி வரும் இந்த சந்தர்ப்பத்தை சரியான முறையில் பயன்படுத்தி மாணவர்கள் எதிர்காலத்தில் ஆற்றலுள்ள சமூகமாக மிளிர வேண்டும்.

இதேவேளை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் விரைவில் அழகியல் பீடம் தனித்து நிறுவப்படும் அதேவேளை அதன்மூலம் மாணவர்கள் தமது உயர் கல்வியை மேற்கொள்ள முடியும். அத்துடன் வெகுவிரைவில் இரு விடுதிகளை அமைத்துக் கொடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படுகின்றது' என்றார்.

யாழ். பல்கலைக்கழகத்திற்குச் சென்ற உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க, பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி உள்ளிட்ட குழுவினரை துணைவேந்தர் சண்முகலிங்கன் வரவேற்றார்.

இந்நிகழ்வில் பல்கலைக்கழக பேராசிரியர்கள், பீடாதிபதிகள், விரிவுரையாளர்கள், பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த மாணவர்கள் எனப் பலதரப்பட்டோரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .