2020 செப்டெம்பர் 19, சனிக்கிழமை

கிளிநொச்சி, கல்லாறு மீனவர்கள் கடற்றொழிலில் ஈடுபடுவதற்கான ஏற்பாடு

Suganthini Ratnam   / 2010 டிசெம்பர் 15 , பி.ப. 01:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹேமந்த்)

கிளிநொச்சி கல்லாற்றுப் பகுதி மீனவர்கள் கடற்றொழில் செய்வதற்கான நிலைமைகளை ஆராயும் கூட்டமொன்று யாழ். மாவட்ட கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களத்தில் நடைபெற்றது.

நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் தலைமையி்ல் நடைபெற்ற இக்கூட்டத்தில், கல்லாற்றுப் பகுதியைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த மீனவர்கள் வாழ்வாதார தொழில் செய்வதற்கு மீன்பிடிப் பிரதேசமான பேய்ப்பாறைப்பிட்டியில் கண்ணிவெடிகள் அகற்றப்படவேண்டியுள்ளது.  இதற்கான மாற்று ஒழுங்கினைத் தற்காலிகமாகச் செய்து தருமாறு கரைச்சி வடக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களினுடைய சம்மேளனத்தின் பொதுமுகாமையாளர் திரு. கணேசபிள்ளை கேட்டுக்கொண்டார்.

கல்லாற்றில் ஆறு மாதங்களுக்கு முன்னர் மீள்குடியேறிய மீனவர்கள் தொழில் வாய்பின்றி சிரமப்படுகின்றனர்.  இந்நிலையில்,  வடமராட்சி கிழக்கு சுண்டிக்குளம் பகுதியில் தற்காலிகமாக மீன்பிடியில் ஈடுபடுவதற்கான அனுமதியை வடமராட்சி கிழக்குப்பகுதி கடற்றொழிலாளர் சங்கங்கள் வழங்கவேண்டுமெனவும் கேட்கப்பட்டது.

இதற்கான மாற்று ஒழுங்கினைச் செய்யவேண்டுமானால் வடமராட்சி கிழக்கில் வெற்றிலைக்கேணி, கட்டைக்காடு, முள்ளியான், நித்தியவெட்டை, வண்ணாங்குளம், சுண்டிக்குளம் ஆகிய பகுதிகளில் மக்களைச் சேர்ந்த மக்கள் மீள்குடியேறுவதற்கான நடவடிக்கை எடுத்தால், அதற்குப் பதிலாக சுண்டிக்குளம் பகுதியில் கல்லாறு மீனவர்கள் தற்காலிகமாகத் தொழில் செய்வதற்கான அனுமதியைத் தம்மால் வழங்கு முடியுமென வடமராட்சி கிழக்குப் பிரதேச கடற்றொழிலாளர் சங்கங்களின் சமாசச் செயலாளர் திரு. சிவசாமி தெரிவித்தார்.

வடமராட்சி கிழக்கில்ஆயிரத்துக்கும் அதிகமான குடும்பங்கள் மீள்குடியேறவேண்டியுள்ளதாகவும் அவர்  கூறினார்.

இறுதியாக வாழ்வாதார நெருக்கடியைப் போக்குவதற்காக கல்லாறு மீனவர்கள் தற்காலிகமாக சுண்டிக்குளம் பகுதியில் மீன்பிடிப்பதற்கு அனுமதியளிப்பதற்கான இணக்கம் காணப்பட்டுள்ளதென்பதுடன்,  வடமராட்சி கிழக்குப் பகுதியில் குடியேறவேண்டிய மக்களின் மீள்குடியேற்ற நடவடிக்கைகளை விரைவுபடுத்துவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் தெரிவித்தார்.

சம்மந்தப்பட்ட சங்கங்கள் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்ட எல்லைப் பிரச்சினைகளுக்கு ஒற்றுமையுடன் செயற்படுவதன் மூலமே தீர்வைக் காணமுடியுமெனவும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.

இந்நிகழ்வில் யாழ். மாவட்ட கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களத்தின் உதவி அத்தியட்சகர் தருமலிங்கம், நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார், வடமராட்சி கிழக்குக் கடற்றொழிலாளர் சங்கங்களின் சம்மேளனச் செயலாளர் சிவசாமி, கரைச்சி வடக்கு கடற்றொழிலாளர் சங்கங்களின் பொதுமுகாமையாளர் கணேசபிள்ளை, கல்லாறு மற்றும் கண்டாவளை சுண்டிக்குளம், வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர் சங்கங்களி்ன் பிரதிநிதிகளெனப் பலரும் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--