2025 ஜூலை 02, புதன்கிழமை

தமிழ் மக்களை ஜனநாயக நீரோட்டத்தில் இணைக்கவே ஐ.தே.க. பிரமுகர்கள் யாழ்.விஜயம்: திஸ்ஸ அத்தநாயக்க

Suganthini Ratnam   / 2011 பெப்ரவரி 17 , மு.ப. 08:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் இன்னமும் ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்துகொள்ளவில்லையெனவும் அவர்களை அரசியல் நீரோட்டத்தில் இணைப்பதற்காகவே வடபகுதிக்கு ஐ.தே.க. பிரமுகர்கள்  விஜயம்  மேற்கொண்டுள்ளதாகவும் ஐ.தே.க.வின் பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

யாழ். மாவட்டத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கான ஐ.தே.க.வின் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே, அவர் இவ்வாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

தமிழ் மக்களுக்கான ஓர் அரசியல் இலக்கை அடைவதற்காகவே யாழ்ப்பாணத்தில் உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் ஐ.தே.க. களமிறங்கியுள்ளது.

பல வருடங்களாக துன்பத்தை அனுபவித்த வடபகுதி மக்கள் இந்த அரசாங்கத்தை நம்பி ஏமாந்து போயுள்ளனர். வடக்கின் அபிவிருத்தியென சொல்லப்படும் வேலைத்திட்டங்கள் எல்லாம் போதுமானளவில் மேற்கொள்ளப்படவில்லை. மந்தகதியிலேயே இந்த அபிவிருத்தித் திட்டங்கள் நடைபெறுகின்றன.

யாழ்ப்பாணத்தில் அபிவிருத்தியை நூற்றுக்குநூறு வீதம் கொண்டு செல்வதற்கு ஐ.தே.க.வினால்  முடியும்.

தமிழ் மக்களுக்கான தீர்வுத் திட்டத்தை முன்வைப்பதை இந்த அரசு பின்னடிப்பது ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல. எனவே, உடனடியாக தமிழ் மக்களுக்கான தீர்வு முன்வைக்கப்பட வேண்டும் என்றார்.

இதேவேளை இந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய ஐ.தே.க.வின் பிரதித் தலைவர் கரு ஜயசூரிய,

தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வுத் திட்டத்தை முன்வைப்பதற்கு ஐ.தே.க. முயற்சிக்கிறதென்பதுடன், இந்தத் தேர்தலில் ஐ.தே.க. பெரும்பான்மை ஆசனங்களை கைப்பற்றுமெனவும் கூறினார்.

'மகேஸ்வரன் அணியில் துடிப்புமிக்க இளைஞர்களை களமிறக்கியுள்ளோம். இவ் இளைஞர்கள்  தங்களது பிரதேசங்களை அபிவிருத்தி செய்வார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்குண்டு.

ஐ.தே.க.வானது தமிழ், சிங்களம், முஸ்லிம் என்ற பேதமில்லாத கட்சியாகும். குறிப்பாக தமிழ் மக்களின் பிரதேசங்களை அபிவிருத்தி செய்ய  ஐ.தே.க. முயற்சி எடுக்கிறது.

நீண்டகால யுத்தத்திற்கு பின்னர் தமிழ் மக்கள் பிரதேச அபிவிருத்தியை நம்பிக்கொண்டிருந்தனர். அதுவும்  ஏமாற்றமளிப்பதாகவே அந்த மக்களுக்கு இருக்கிறது.

தங்களது உரிமைகளை மீட்டெடுப்பதற்காக தேர்தலில் களமிறக்கப்பட்ட மகேஸ்வரன் அணி இளைஞர்கள் முயற்சி எடுப்பினும், ஐ.தே.க.வின் புதிய பயணம் தொடருமெனவும் அவர் தெரிவித்தார்.

இங்கு கருத்துத் தெரிவித்த ஜயலத் ஜயவர்த்தன,

'சிறைச்சாலைகளில் வாடுகின்றவர்களை நானும் எனது நண்பன் மகேஸ்வரனும் முன்னர் சென்று பார்வையிட்டுள்ளோம்.

மகேஸ்வரன் கனவு நனவாக வேண்டுமானால் சிறையிலுள்ள தமிழ்க் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும். அதற்கான முயற்சியில் நாம் ஈடுபட்டு வருகின்றோம்' என கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .