2020 ஒக்டோபர் 26, திங்கட்கிழமை

அரசு கட்சி தவிர ஏனைய கட்சிகள் பிரசார நடவடிக்கைகளை மேற்கொள்வதில் இராணுவம் தடையாகவுள்ளது: முன்னாள் எம

Suganthini Ratnam   / 2011 ஜூலை 16 , மு.ப. 03:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

(தாஸ்)

வடபகுதி உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் எந்தவகையிலும் வெற்றியீட்டும் முகமாக இராணுவத்தினரின் செயற்பாடுகள் அதிகரித்துள்ளதுடன், இதற்கு அரசாங்கமே துணை போவதாகவும் மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார்.

மக்கள் விடுதலை முன்னணியின் ஊடகவியலாளர்கள் சந்திப்பு யாழ்ப்பாணத்திலுள்ள யாழ். பாடி விடுதியில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

இந்த உள்ளூராட்சிமன்றத்  தேர்தலில் அரசாங்கக் கட்சி தவிர்ந்த ஏனைய கட்சிகள் தமது தேர்தல் பிரசார நடவடிக்கைகளை  மேற்கொள்வதற்கு இராணுவம் தடையாகவுள்ளதுடன், அவர்களது பிரசன்னமும் அதிகரித்துக் காணப்படுகின்றது.

இந்த நிலையில், அரசாங்கத்தின் சுவரொட்டிகள் பொதுவிடங்களில் ஒட்டப்பட்டு வருவதுடன் , வீடுகளுக்குச் சென்று அரசாங்கத்திற்கு வாக்களிக்குமாறு பிரசாரங்களும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கு அரசாங்க வாகனங்கள் முற்றுமுழுதாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. தொலைத்தொடர்பு ஆணைக்குழுவிற்கு சொந்தமான 2 வாகனங்கள் டீசல் அடிக்கப்பட்டு யாழ்.  குடாநாட்டில் தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்குச் சொந்தமான வாகனமொன்று சுவரொட்டிகளை ஒட்டுவதற்கு கிளிநொச்சியில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. முற்றுமுழுதாக அரசு இந்தத் தேர்தலில் வெற்றியீட்டுவதற்காக அரச வளங்களைத் துஷ்பிரயோகம் செய்து வருகின்றன. அதற்கு படைத்தரப்பைப் பயன்படுத்தி வருகின்றது.

இராணுவத்தினர் உண்மை எதுவெனத் தெரிந்துகொண்டு செயற்பட  வேண்டும். கட்டுநாயக்கா சுதந்திர வர்த்தக வலயத்தில் இடம்பெற்ற போராட்டத்தின்போது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் பலியானார். இதனையடுத்து பொலிஸ் அதிகாரிகளை அரசாங்கம் கைவிட்டு பொலிஸ் தலைமையிலேயே மாற்றங்கள் ஏற்பட்டன.  இதன் பின்னணியில் அரசாங்கமே இருந்தது. எனினும், பொலிஸார் கைவிடப்பட்டனர். இதேபோன்ற செயற்பாடே இனிவரும் காலங்களில் இராணுவத்தினருக்கும் ஏற்படும்.

மக்கள் விடுதலை முன்னணியினருக்கு வாக்களிப்பதன் மூலம் தமிழ் மக்கள் தமது உரிமைகளைப் பெற்றுக்கொள்வதற்கான உரிய சந்தர்ப்பமொன்றை வழங்க வேண்டும் என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--