2021 ஏப்ரல் 19, திங்கட்கிழமை

பகிடிவதையால் காயமடைந்த யாழ். பல்கலை மாணவன் வைத்தியசாலையில்

Super User   / 2011 நவம்பர் 14 , பி.ப. 05:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

யாழ். பல்கலைக்கழக முதலாம் வருட மாணவன் பகடிவதை என்ற பேரில் தாக்கப்பட்டு யாழ். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முல்லைத்தீவை சேர்ந்த 20 வயதான துரைராஜா தமிழ்செல்வன் என்ற மாணவன் இரண்டாம் வருட மாணவர்களினால் தாக்கப்பட்ட நிலையில் தலையில் பலத்த காயங்களுடன்  யாழ். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவித்தன.

இத்தாக்குதல் தொடர்பாக குறித்த மாணவனின் சகோதரர் யாழ். வைத்தியாசாலையிலுள்ள பொலிஸ் காவலரணில் முறைப்பாடு செய்துள்ளார்.

இது தொடர்பில் பல்கலை வட்டாரமொன்று கூறுகையில்,

இன்று திங்கட்கிழமை மதியம் கைலாசபதி கலையரங்கில் புதுமுக மாணவர்களுடன் சிரேஷ்ட மாணவர்கள் உறவினை ஏற்படுத்திக்கொள்வதற்காக 'மிக்ஸிங் - அப்' எனும் நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது, குறித்த அரங்கத்திற்கு வந்த நான்கைந்து ஆண் மாணவர்களுடன் வந்த சிரேஷ்ட மாணவியொருவர், 'யார் தமிழ்ச்செல்வன்?' என வினவியுள்ளார்.

அதன் பின்னர் குறித்த மாணவர் அடையாளம் காணப்பட்டு, சிரேஷ்ட மாணவர்கள் பலரின் முன்னிலையில் கண்மூடித்தனமாகத் தாக்கப்பட்டார்.

இதனால் நிலைகுலைந்து போன புதுமுக மாணவர் கீழே விழுந்த போது, அவரது தலையில் கால்களாலும் தாக்குதல் நடத்தப்பட்டது. இதையடுத்து அவர் உணர்விழந்தார். அதன் பின்னர் அவர் நினைவிழந்தநிலையில் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டது.

மேற்படி மாணவர் இறுதி யுத்தத்தின் போது எறிகணை வீச்சினால் தலையில் படுகாயமடைந்து, தெய்வாதீனமாக உயிர் தப்பிய நிலையில்  நலன்புரி நிலையத்தில் பல்வேறு இன்னல்களுக்கும் மத்தியில் கல்வி கற்று பல்கலைக்கழகத்துக்கு தெரிவாகியிருந்தார் எனவும் அவ்வட்டாரம் தெரிவித்தது.

இதேவேளை, இவ்விடயம் தொடர்பாக யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் தவபாலனை தொடர்பு கொண்டு வினவிய போது,

'குறித்த தாக்குதல் தொடர்பில் நான் இதுவரை எதுவும் கேள்விப்படவில்லை. தற்போது இரவு நேரம் என்பதால் இது தொடர்பான மேலதிக விபரங்களை அறிவது  கடினமாகும்.

எனினும், இது தொடர்பில் நாளை காலை அறிய முயற்சிப்பேன். தற்போது அனைவரினதும் பார்வை யாழ். பல்கலைக்கழகத்தின் மீதுள்ள நிலையில் இவ்வாறான அசம்பாவிதங்கள் தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும்.

ஆகையினால், இது தொடர்பில் மேலதிக தகவல்களை பெற்று, தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .