2021 ஏப்ரல் 15, வியாழக்கிழமை

"யுத்தம் முடிவடைந்த பின்னரும் தமிழர் வாழ்வு இக்கட்டான சூழலில் உள்ளது"

Menaka Mookandi   / 2011 நவம்பர் 16 , மு.ப. 10:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

(கவிசுகி)

'யுத்தம் முடிவடைந்து மூன்று வருடங்களாகியும் தமிழ் மக்கள் இன்றும் கடினமான சூழலில் தான் வாழ்ந்து வருகின்றனர்' என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

யாழ். மாவட்ட தேருநர் இடாப்புத்திருத்தம் எனும் தொனிப்பொருளில் சுதந்திரமான நியாயமான தேர்தல்களுக்கான மக்கள் செயற்பாடு அமைப்பின் ஏற்பாட்டில் நேற்று யாழ் கிறீன் கிறாஸ் ஹோட்டலில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், 'தமிழ் மக்கள் தாம் ஏன் வாக்களிக்க வேண்டும் என்று நினைக்கின்றார்கள். அது அவர்களுடைய தவறில்லை. கடந்தகால யுத்த அழிவுகள், இடம்பெயர்வுகள் காரணத்தால் தேர்தல்களை புறக்கணித்து வந்துள்ளனர். இது தவிர, இடம்பெயர்ந்து சொந்த இடங்களில் மீளவும் குடியேற முடியாத நிலையில் எத்தனையோ மக்கள் இன்னும் அல்லல்படுகின்றனர்.

இந்நிலையில் எவ்வாறு அக்கறையுடன் தம்மை வாக்காளராக பதிய முன்வருவார்கள்? எனவேதான் முழு இலங்கையுடன் தமிழர்களின் பிரச்சினையை ஒப்பிட்டு பார்க்க வேண்டாம் என்று கூறுகின்றோம். வாக்காளர்களின் எண்ணிக்கை குறைவடைந்தால் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கான சட்டம் இருப்பினும் யுத்தம் இடம்பெற்ற பிரதேசத்தை முழுமையாகக் கொண்டுள்ள தேர்தல் மாவட்டங்களுக்கு அதை நடைமுறைப்படுத்த முடியாது.

தேர்தல் காலங்களில் சுவரொட்டிகள் ஒட்டக்கூடாது என்பது சட்டமாக இருந்த போதிலும் ஆட்சியில் உள்ளவர்கள் அதை மீறத்தான் செய்கின்றனர். அதைத் தடுக்க வேண்டிய அதிகாரிகள் அனுசரித்துப் போகின்றனர். காரணம் அரசாங்கத்தை எதிர்த்தால் தாம் பதவியில் இருக்க முடியாது என்பதால் பதவிகளைத் தக்கவைத்துக் கொள்வதற்காக அரச அதிகாரிகள் பலர் அரசாங்கத்திற்கு சார்பாக தேர்தலில் போட்டியிடுபவர்கள் போன்று செயற்பட்டனர் என்பதும் மறுக்க முடியாத உண்மை.

இதனை கடந்த உள்ளூராட்சித் தேர்தலின் போதும் அதற்கு முன்னைய தேர்தலின் போதும் நாம் அனுபவித்திருந்தோம். மக்களை வாக்காளர்களாக இணைப்பதற்கு நாம் எந்தவித நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்று கூறமுடியாது. அண்மையில் கூட 40 ஆயிரம் படிவங்களை விநியோகித்திருந்தோம். இருப்பினும் வாக்காளர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது.

மேலும் வெளிநாட்டுக்கு சென்றவர்களின் பெயர்கள் வாக்காளர் இடாப்பிலிருந்து எந்த வகையில் வெட்டப்பட்டது என்பது தெரியவில்லை. இலங்கைப் பிரஜையாக தம்மை மீளவும் பதிவு செய்வதற்கு வெளிநாட்டில் உள்ளவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். தொழிலுக்காக வெளிநாட்டிற்குச் சென்றவர்கள் இங்கு மீளவும் வந்து வாழ முடியும். அவர்களின் பெயர்களை வாக்காளர் இடாப்பிலிருந்து எவ்வாறு நீக்க முடியும்?

கிராம சேவையாளர்கள் சிலர் அரசாங்கத்திற்கும் அது சார்ந்த கட்சிகளுக்கும் வாக்களிக்கக் கூடியவர்களின் பெயர்களை வாக்காளர் இடாப்பில் இணைப்பதில் தான் முனைப்புக் காட்டுகின்றனர். யுத்தம் முடிவடைந்து மூன்று வருடங்களாகியும் தமிழ் மக்கள் இன்னமும் கடினமான சூழலில் தான் வாழ்கின்றனர். இராணுவத்தினரின் கட்டுப்பாட்டின் கீழ் தமிழ் மக்கள் கொண்டு வரப்பட்டுள்ளனர்.

சட்டம் எல்லோருக்கும் பொதுவானது என்றாலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு சில சலுகைகளாவது வழங்க முன்வர வேண்டும். இவை தொடர்பாக நாடாளுமன்றத்தில் நாம் கதைத்தால் அதை எவரும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். காரணம் நாடாளுமன்றத்தில் நாம் விரும்பத்தகாத பிரஜைகளாக உள்ளோம்.

எமது கருத்தை நாடாளுமன்றத்தில் கூறி உரிய தீர்வினை பெற முடியாத நிலையில் உள்ளோம். எனவே அரசாங்கம் ஒரு காலமும் தமிழ் மக்களுக்கு சாதகமாக நடக்காது என்பது உண்மை' என அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X