2020 செப்டெம்பர் 26, சனிக்கிழமை

காணி, பொலிஸ் அதிகாரங்களை நடைமுறைப்படுத்துவோம்: சி.வி

Kogilavani   / 2013 ஒக்டோபர் 24 , மு.ப. 08:40 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.கே.பிரசாத், சுமித்தி தங்கராசா 


'13 ஆவது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் உருவாக்கப்பட்டுள்ள மாகாண சபையின் அதிகாரங்களின் கீழுள்ள காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை சட்ட ரீதியாக நடைமுறைப்படுத்துவோம்' என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

'எமது மாகாண சபைகளுக்கு மத்திய அரசாங்கம் அனுசரணையாக இயங்க வேண்டுமே தவிர மத்திய அரசாங்கத்திற்கு தோள்கொடுக்க மாகாண சபைகள் முன்வரவேண்டும் என்று எதிர்பார்ப்பது அதிகாரப்பரவலின் தார்ப்பரியத்தினை மத்திய அரசாங்கம் அறிய முற்படவில்லை என்ற கருத்தையே வெளிப்படுத்தும்' என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

யாழ். ரில்கோ ஹோட்டலில் வியாழக்கிழமை (24) நடைபெற்ற வடமாகாண சபை உறுப்பினர்களிற்கான செயலமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றி அவர்,

'மத்திய அரசாங்கம், மாகாண சபைகள், பிரதேச சபைகள் ஆகியன மக்களின் நலன்பேண உருவாக்கப்பட்டதுடன், மக்களின் ஆணையை நிறைவேற்றுவதே இவற்றின் கடமையாகும்.

1987ஆம் ஆண்டு இலங்கை - இந்திய உடன்படிக்கையின் போது தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக மேற்படி சபைகள் அறிமுகப்படுத்தப்பட்டன.

ஆனால் அன்றைய ஜனாதிபதி தமிழ் பேசும் மக்களிற்கு எந்தவிதமான சலுகைகளையும் தான் கொடுக்கவில்லை என சிங்கள மக்களுக்கு எடுத்துக்காட்டும் விதத்திலான மாகாண சபைகளை சகல மாகாணங்களுக்கும்  அறிமுகம் செய்தார்.

வடக்கு, கிழக்கு மாகாணங்கள் சேர்ந்தே ஒரு மாகாண சபை ஒதுக்கப்பட்டதுடன், தமிழ் பேசும் மக்கள் வாழும் இடங்களிற்கு அதிகாரப் பகிர்வினை அறிமுகப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திலேயே இவ்வாறு மாகாண சபை வகுக்கப்பட்டிருந்தமை தெரியவருகின்றது.

எமது மாகாணம் போரினால் பாதிக்கப்பட்டு இருப்பதினால், ஏனைய மாகாண மக்களுடன் சமமாக வாழ்வதற்கு எமது மாகாணத்திற்காக ஒதுக்கப்படும் நிதி மற்றைய மாகாணங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒதுக்கப்படும் நிதித்தொகையினை விட பன்மடங்காக அதிகரிக்கப்பட வேண்டும்.

 'ஒரு தாய்க்கு ஒன்பது குழந்தைகள் இருக்கும்போது அதில் ஒரு குழந்தை சற்று ஊட்டக்குறைவுடன் காணப்பட்டால், தாயானவள் அந்த குழந்தையை சற்றுக் கூடிய சிரத்தையுடன் கவனிப்பாள்'.

எனவே அரசாங்கம் போரினால் பாதிக்கப்பட்ட எமது மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வடமாகாண சபைக்கு போதியளவு நிதி உதவிகளை ஒதுக்குவது சிறந்ததென்று கருதுகின்றேன்.

மத்திய அரசாங்கம் அதிகாரப் பரவலின் அடிப்படையினைக் கைவிட்டு, மாகாணங்கள் மத்திய அரசை முதன்மைப்படுத்தி தமக்கு அனுசரணையாகவே இயங்க வேண்டும் என்று கூறுவதை நாங்கள் அவதானிக்கின்றோம்.

அதிகாரப்பகிர்வானது மத்திய அரசாங்கத்தைப் பலப்படுத்தவோ அதனை முதன்மைப்படுத்தவோ வகுக்கப்பட்ட ஒரு உபாயமல்ல. மாறாக மத்திய அரசாங்கம் வலிமை குறைந்த மாகாண மக்களை எழுப்பி தங்கள் கால்களில் அவர்களை நிற்க வைக்கவேண்டும் என்ற எண்ணத்திலே வகுக்கப்பட்டது.

எனவே எமது மாகாண சபைகளுக்கு மத்திய அரசாங்கம் அனுசரணையாக இயங்க வேண்டுமே தவிர மத்திய அரசாங்கத்திற்கு தோள்கொடுக்க மாகாண சபைகள் முன்வரவேண்டும் என்று எதிர்பார்ப்பது அதிகாரப்பரவலின் தார்ப்பரியத்தினை மத்திய அரசாங்கம் அறிய முற்படவில்லை என்ற கருத்தையே வெளிப்படுத்தும்.

வடக்கு கிழக்கு மாகாணங்களிற்கு அத்தியாவசியமான உரித்துக்கள் மற்றைய ஏழு மாகாணங்களுக்கும் தேவைப்படாமல் இருக்கலாம். காணி சம்பந்தமாகவும் மக்களின் பாதுகாப்பு சம்பந்தமாகவும் மாகாண சபை ஒன்று எடுக்கவேண்டிய பொறுப்பு அந்தந்த மாகாண சபையின் நிலையை  ஒட்டியதே தவிர சகலருக்கும் ஒரேநிலை இருப்பதாக கொள்வது தவறாகும்.

வடமாகாணத்தின் காணிகள்  சூறையாடப்படுவதுடன், மக்களின் பாதுகாப்பு கேள்விக் குறியாக்கப்பட்டுள்ளது. இவற்றுக்கு முகங்கொடுக்கவே சட்டவாக்கங்களில் மாகாண சபைக்கு பொலிஸ் அதிகாரங்களும் காணி அதிகாரங்களும் கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றை நாம் சட்டப்படி நடைமுறைப்படுத்தவுள்ளோம்.

எமது மத்திய அரசாங்கம் வடமாகாண சபைக்கு இவ்வாறான அதிகாரங்களை பகிர்ந்தளிக்கவேண்டிய அத்தியாவசியத்தை உணர்ந்து செயற்படுவார்கள் என்று நம்புகின்றேன்.

13 ஆவது திருத்தச்சட்டத்தின் கீழ் மத்திய அரசாங்கத்திற்கு போதிய செல்வாக்கை கைவசம் வைத்துக்கொண்டே மேற்படி அதிகாரங்கள் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ளதுடன், அவற்றையாவது வழங்குவதில் தயக்கங்காட்டக் கூடாது.
தயக்கம் காட்டினால் சிறுபான்மை இன மக்கள் தமது வாழ்க்கையை சீரமைத்துச் செல்வதை மத்திய அரசாங்கம் விரும்பவில்லை என்ற ஒரு கருத்தை உலகறியச் செய்து விடும். எனவே இந்த பழிக்கு ஆளாவதைத் தவிர்த்து மத்திய அரசாங்கம் செயற்படவேண்டும்' என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

  Comments - 0

  • AJ Thursday, 24 October 2013 09:19 AM

    இந்த இரண்டும் தற்போது அவசியமான ஓன்று. வட மாகாணம் ஏனைய மாகாணங்களுக்கு ஒரு முன் உதரணமாக செயல்பட வேண்டும். வாழ்த்துக்கள்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--