2021 மார்ச் 01, திங்கட்கிழமை

பிரதேச சபைகளுக்கு பொதுச்சுகாதாரப் பரிசோதகர்கள் வேண்டும்

Kogilavani   / 2014 மார்ச் 28 , மு.ப. 10:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

நா.நவரத்தினராசா

சுகாதாரத் திணைக்களங்களில் கீழ் மாற்றப்பட்ட பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் மீண்டும் பிரதேச சபைகளின் கீழ் நியமனம் செய்யப்படல் வேண்டும் என்ற தீர்மானம் உடுவில் (வலி.தெற்கு) பிரதேச சபையில் வியாழக்கிழமை (27) ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளதாக பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா பிரகாஸ் தெரிவித்தார்.

பிரதேச சபையின் மாதாந்தக் கூட்டம் நேற்று (27) நடைபெற்ற போதே இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக அவர் கூறினார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

'வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் யாழ்.மாவட்டத்தில் பிரதேச சபைகளில் கடமையாற்றிய பொதுச் சுகாதார பரிசோதகர்களை சுகாதாரத் திணைக்களங்களின் கீழ் மாற்றியமையானது பக்கச்சார்பான செயல்பாடாக அமைந்துள்ளது,
எமது பிரதேச சபையின் பொதுச்சுகாதாரப் பரிசோதகர்களின் ஆளணி உறுதிப்படுத்தப்படுவதுடன் அதிகரிக்கப்படவும் வேண்டும். எமது பிரதேச சபை நகரசபைக்குரிய அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளையும் வளங்களையும் தேவைப்பாடுகளையும் கொண்டு காணப்படுகின்றது.

இலங்கையில் பல பிரதேச சபைகளிலும் நகரசபைகளிலும் அமைந்திருப்பது போன்ற ஆளணி எமது பிரதேச சபைக்கும் ஏற்படுத்தப்படல் வேண்டும். மாநகரசபை சட்ட ஏற்பாடுகள் போல பிரதேச மற்றும் நகர சபைகளின் கீழ் தனியான சுகாதார அலகொன்றினைத் ஸ்தாபித்து உள்ளூராட்சி மன்றங்களின் பிரதானமானதும் அத்தியாவசியமானதுமான பொதுச்சுகாதாரக் கடமைகளை விரைவாகவும் நிறைவாகவும் வழங்குவதற்கு ஏற்றாற் போல் சுகாதார வைத்திய அதிகாரிகளை இணைப்பதற்கு ஏற்ற வகையில் உரியவாறான சட்ட ஏற்பாடுகள் செய்யப்படல் வேண்டும்.

இவை தொடர்பில் உரிய தரப்பினர்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்படல் வேண்டும். அத்துடன் பிரதேச சபைகளுக்கு சுகாதாரத் திணைக்களத்தினால் ஒழுங்கு முறைப்படி விண்ணப்பம் கோரி இணைக்கப்பட்ட பொதுச்சுகாதாரப் பரிசோதகர்கள் மீளப் பெறப்பட்டமையையும் அரச நிர்வாகத்தில் அநாவசியமான பொலிசாரின் தலையீட்டினையும் கண்டித்து சுகாதாரத் திணைக்களத்தின் கீழுள்ள பொதுச்சுகாதாரப் பரிசோதகர்களும் இதர தொழிற் சங்கங்களும் முன்னெடுத்து வருகின்ற போராட்டத்திற்கு எமது பூரண ஆதரவையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

பொதுமக்களும் உள்ளூராட்சி மன்றங்களும் எதிர்நோக்கியுள்ள பாதிப்பை நன்கு அறிந்து உரிய தரப்பினர் சாதகமான பரிசீலனையை மேற்கொண்டு பிரதேச சபைகளுக்கு பொதுச்சுகாதாரப் பரிசோதகர்களை மீளவும் இணைக்க வேண்டும். மேற்குறித்த விடயத்தில் வடமாகாண சுகாதார அமைச்சர் அவர்களின் ஒரு பக்கச் சார்பான செயற்பாட்டிற்கு எமது சபை உறுப்பினர்கள் தமது வன்மையான கண்டனத்தையும் தெரிவித்தனர்.

வடமாகாண சுகாதார அமைச்சர் மற்றும் உள்ளூராட்சி மன்ற தவிசாளர்களுக்குமிடையில் நடைபெற்ற கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்ட விடயம் எதேச்சதிகாரமாக மீறப்பட்டு பொதுச்சுகாதாரப் பரிசோதகர்கள் மீளப்பெறப்பட்டுள்ளனர்.

பொதுச்சுகாதாரப் பரிசோதகர்கள் விடயத்தில் உரிய தரப்பினர் சாதகமான பதிலை உடனடியாக வழங்க வேண்டும் எனவும் சபையின் தவிசாளர் பிரகாஸ் மேலும் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் நல்லூர், உடுவில் (வலி.தெற்கு), தெல்லிப்பளை (வலி.வடக்கு), சங்கானை (வலி.மேற்கு) ஆகிய பிரதேச சபைகளின் கீழ் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் கடமையாற்றி வந்திருந்தனர்.

இருந்தும் அவர்கள் தங்களை அச்சுறுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும் தங்களால் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு இடையூறாகவிருப்பதாகவும் இதனால் குறித்த 4 பிரதேச சபைகளின் கீழுள்ள பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களை சுகாதாரத் திணைக்களத்தின் கீழ் மாற்றும்படி சுகாதார வைத்தியதிகாரிகள் போராட்டம் முன்னெடுத்தனர்.

பின்னர், வடமாகாண ஆளுநர் மற்றும் வடமாகாண சுகாதார அமைச்சர் ஆகியோர் இணைந்து உடுவில் தவிர்ந்த ஏனைய பிரதேச சபைகளின் கீழிருக்கும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களை சுகாதாரத் திணைக்களத்தின் கீழ் இடமாற்றம் செய்தார்கள்.

பொதுச்சுகாதாரப் பரிசோதகர்களை பிரதேச சபைகளின் கீழ் மீண்டும் மாற்றும்படி கோரி சுகாதாரத் திணைக்களத்தின் கீழ் பணியாற்றும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் கடந்த 17 ஆம் திகதியிலிருந்து வெளிக்களப் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .