2025 ஒக்டோபர் 22, புதன்கிழமை

கடலில் மீன் பிடிக்க பாஸ் தேவையில்லை: அருள்தாஸ்

Suganthini Ratnam   / 2014 மார்ச் 31 , மு.ப. 10:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ற.றஜீவன்

கடலில் மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்கள் திங்கட்கிழமை  (31) முதல் தமது விபரங்களை பதிவு செய்து அனுமதி (பாஸ்) பெற்ற பின்னரே தொழிலுக்குச் செல்ல முடியுமென்று தாம் அறிவிக்கவில்லையென்று  52ஆவது  படைப்பிரிவின் அதிகாரி மேஜர் ஜெனரல் ஜெயசுந்தர தெரிவித்ததாக வடமராட்சி 14 மீனவர் சங்கங்களின் சமாசத்தலைவர் வஸ்த்தியாம்பிள்ளை அருள்தாஸ் தெரிவித்தார்.

கடலில் மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்கள் திங்கட்கிழமை (31) முதல் தமது விபரங்களை பதிவு செய்து பாஸ் பெற்ற பின்னரே தொழிலுக்கு செல்ல வேண்டும் என இராணுவம் அறிவித்துள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன. 

இந்நிலையில், இது தொடர்பான கலந்துரையாடல் திங்கட்கிழமை  (31) வடமராட்சியிலுள்ள 521ஆவது படைப்பிரிவின் தலைமையகத்தில் நடைபெற்றது. இதன்போதே குறித்த படைப்பிரிவின் அதிகாரி மேற்கண்டவாறு தெரிவித்ததாக சமாசத்தலைவர்  கூறினார்.

இது தொடர்பில் வஸ்த்தியாம்பிள்ளை அருள்தாஸ் மேலும் தெரிவிக்கையில்,

'கடலில் மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்கள் திங்கட்கிழமை (31)  முதல் தமது விபரங்களை பதிவு செய்து அனுமதி  பெற்ற பின்னரே தொழிலுக்குச் செல்ல முடியும் என இராணுவம் அறிவித்துள்ளதாக ஊடகங்களில் வெளிவந்த செய்திகள் தவறானதாகும்.

வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு கடல் வழியாக கொண்டுவரப்படுகின்ற போதைவஸ்துகள், தங்கம் போன்றவற்றை கட்டுப்படுத்துவதற்காக தற்காலிகமாக கடற்கரையில் படை முகாம்கள் அமைக்கப்படவுள்ளன.

இதனால், சந்தேகத்திற்கிடமாக அவ்விடத்தில் நடமாடும் சிலரிடம் நாம் சோதனை நடவடிக்கையில் ஈடுபடுவோமே தவிர, மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்வதற்கு பாஸ் பெற வேண்டும் எனக் கூறவில்லையென்று  இக்கலந்துரையாடலில் குறித்த படை அதிகாரி தெரிவித்துள்ளார்' என்றார்.

இக்கலந்துரையாடலில் வடமராட்சியிலுள்ள 14 மீனவர் சங்கங்களின் தலைவர்கள், 521 படைப்பிரிவின் அதிகாரி கேணல் கருணாரத்தின ஆகியோர் கலந்துகொண்டிருந்ததாகவும்  சமாசத்தலைவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .