2020 ஒக்டோபர் 24, சனிக்கிழமை

உள்ளூராட்சி மன்றங்களின் வளர்ச்சி கட்சிக்கு அப்பாற்பட்டது: அனந்தராஜ்

Kogilavani   / 2014 ஏப்ரல் 09 , மு.ப. 08:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

'உள்ளுராட்சி மன்றங்களின் வளர்ச்சியானது கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டது என்பதை நாம் ஒவ்வொருவரும் உணர்ந்து கட்சி பேதமற்ற வகையில் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்' என வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத் தலைவர் ந.அனந்தராஜ் செவ்வாய்க்கிழமை (08) தெரிவித்தார்.

வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தின் 33 ஆவது மாதாந்தக் கூட்டத் தொடர் நகர சபை மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை (08) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்;ந்தும் உரையாற்றிய அவர்,

'எதிர்வரும் காலங்களில் நடைபெறும் கூட்டங்களை நகரசபை கட்டளைச் சட்டத்திற்கு அமைவாக நடத்தவேண்டிய நிலை உள்ளதால், அத்தகைய விதிமுறைகளுக்கு அமைய உறுப்பினர்கள் தமக்கு உரித்தான ஒழுக்க நெறிகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.

சபையின் கூட்டங்கள் யாவும் தவிசாளரின் தலைமையில் அமைதியான முறையில் நடைபெறும்போது கூட்டத்தில் கருத்துக்களை எவராவது  தெரிவிப்பதாயின் எழுந்து நின்று பேசுதல் வேண்டும். ஒருவர் பேசும் பொழுது, மற்றைய உறுப்பினர்கள் இடைமறித்து பேசுவதைத் தவிர்க்க வேண்டும்.

நிகழ்ச்சி  நிரலுக்கு அமையவே கூட்ட நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும். நிகழ்ச்சி நிரலில் இடம்பெறாத எந்த விடயமும் சபையில் முன்னெடுக்கப்பட முடியாது. ஏதாவது பிரேரணைகள் சமர்ப்பிப்பதாயின் கூட்டம் நடைபெறுவதற்கு ஏழு நாட்களுக்கு முன்னர்  செயலாளரிடம் எழுத்து மூலம் கையளிக்கப்படவேண்டும். 

அவை பின்னர் பரிசீலிக்கப்பட்டு பொருத்தமானவை எனக்கருதினால், நிகழ்ச்சி நிரலில் செயலாளரினால் சேர்த்துக் கொள்ளப்படும். நிகழ்ச்சி நிரலில் சேர்த்துக் கொள்ளப்படாத எந்த ஒரு விடயமும் சபையில் முன்னெடுக்கப்பட முடியாது.

இந்த வருடம் வரவு செலவுத் திட்டத்தில் உள்ளடக்கப்படாத எந்த அபிவிருத்தித் திட்டமும் மாற்றப்பட்டு வேறு அபிவிருத்திகளை மேற்கொள்ளவேண்டுமென்ற தீர்மானத்தை உறுப்பினர்கள் தாம் நினைத்தவாறு கொண்டுவரமுடியாது. 

கூட்டம் ஒன்றின் மூலம் தவிசாளரைப் பழிதீர்க்கும் வகையில்;; உறுப்பினர்கள் நடந்து கொள்வதும், தொடர்ச்சியாகச் சத்தமிட்டுக் கூட்டத்தைக் குழப்பிக் கொண்டிருப்பதும், அநாகரிகமான வார்த்தைகளைப் பேசுவதும், கூட்டத்தின் ஊடாக தவிசாளரை அச்சுறுத்த முயற்சிக்க நினைப்பதும் சட்டத்திற்கு முரணானதாகும்.

சபையின் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் செயலாளரினால்   மேற்கொள்ளப்படும் போது சங்கங்களின் பிரதிநிதிகளையோ அல்லது தனிப்பட்ட முறையில் தனது அனுமதியுடன், எவரையாவது அழைத்து தலைவர் என்ற வகையில்; கலந்துரையாடலை மேற்கொள்ளும் அதிகாரமும் கடமையும் செயலாளருக்கு   கையளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான கலந்துரையாடல்களின் போது,  எவரையும் அழைக்கவேண்டிய அவசியமில்லை.

 

இதில் தலையிடும் அதிகாரம் எவருக்கும் இல்லை. இதில் சொல்லப்பட்ட விடயங்களை மேலும் அறிந்து கொள்வதற்கு நகரசபைக் கட்டளைச் சட்டத்தின் சட்ட விதிகளை ஒவ்வொரு உறுப்பினரும்  வாசித்து அறிந்து கொள்ள வேண்டும். சபை கூட்ட ஒழுங்கு விதிகள் தொடர்பான சட்ட ஏற்பாடுகளைக் கவனத்தில் கொள்ளாது சபைக் கூட்டங்கள் நடத்தப்படுமாயின், அக்கூட்டமும், அதில் மேற்கொள்ளப்படுகின்ற தீர்மானங்களும் செல்லுபடியற்றதாகும்.

வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராகச் செயற்படுவதோ, நகர அபிவிருத்திக்குத் தடையாக இருப்பதோ, அல்லது மாதாந்த செலவினங்களுக்கான கொடுப்பனவுகளுக்கான அங்கீகாரம் வழங்காது அதற்கு எதிராக வாக்களிப்பதோ  அல்லது சபையின் வருமானத்தைப் பாதிக்கும் வகையில் தவறான தீர்மானங்களைக் கொண்டு வருவதோ முறையற்ற செயலாகும்.

சபையின் ஆக்கபூர்வமான தீர்மானங்களுக்கு எதிராக  வாக்களிப்பதை விட்டு நல்ல விடயங்களை நிறைவேற்ற ஒத்துழைப்பை வழங்க உறுப்பினர்கள் முன்வரவேண்டும்.

மாதாந்த கொடுப்பனவுகளுக்கான அங்கீகாரம்  சபையில் நிறைவேற்றப்படாது விடின், வீதிகளிலும், வீடுகளில் இருந்தும் கழிவுகள் அகற்றப்படாததுடன், அபிவிருத்தி வேலைகளும் முற்றாகவே பாதிக்கப்படும்.

அத்துடன் அலுவலர்களின் சம்பளங்கள், சபை உறுப்பினர்களுக்கான கொடுப்பனவுகள் மற்றும் செய்யப்பட்ட அபிவிருத்தி வேலைகளுக்கான கொடுப்பனவுகள் எல்லாமே முடக்கப்படும் என்பதைத் ஒவ்வொரு உறுப்பினர்களும் கவனத்தில் எடுத்துப் பொறுப்புடன் செயற்படுமாறும் வேண்டுகின்றேன்' என மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--