2020 ஒக்டோபர் 27, செவ்வாய்க்கிழமை

ஆய்வாளர்களின் அறிவை விட விவசாயிகளின் அறிவு குறைந்ததில்லை

Suganthini Ratnam   / 2014 ஏப்ரல் 17 , மு.ப. 08:23 - 0     - {{hitsCtrl.values.hits}}


விவசாயிகளிடம் அனுபவ அறிவுடன் தலைமுறை தலைமுறையாகத் திரண்டுவந்த பாரம்பரிய அறிவு  உள்ளது. இவர்களின் இவ்வாறான அறிவு பல்கலைக்கழக ஆய்வாளர்களின் அறிவை விட குறைந்தது இல்லை என வடமாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் தெரிவித்தார்.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில், விவசாயிகளுடனான தொடர்பாடல் நிகழ்வு யாழ். பல்கலைக்கழகத்தின் மருத்துவபீட மண்டபத்தில் வியாழக்கிழமை (17) நடைபெற்றது. இதில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

கொழும்பு பல்கலைக்கழகத்தின் விவசாய தொழில்நுட்பம் மற்றும் விஞ்ஞானக் கற்கைகள் நிறுவனமும் யாழ். பல்கலைக்கழகத்தின் விவசாயபீடமும் வடமாகாண விவசாய அமைச்சும் இணைந்து இந்நிகழ்வை நடத்தியது.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

'ஆராய்ச்சியாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் இடையில் தொடர்பாடல் இன்றியமையாதது. இந்தத் தொடர்பாடல் வெறுமனே ஆராய்ச்சியாளர்கள், விவசாயிகளுக்கு தங்களது கருத்துகளை தெரிவித்துவிட்டுப் போகும் ஒருவழித் தொடர்பாடலாக இருந்துவிட முடியாது.

ஆய்வாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் இருவழித் தொடர்பாடல் இருப்பது அவசியம். ஏனெனில் ஆய்வாளர்கள், விவசாயிகள் என்று இரண்டு தரப்பினர்களிலும் ஒரு தரப்பினரின் அறிவு மற்றைய தரப்பினரின் அறிவை விடக் குறைந்தது இல்லை. நமது பரம்பரை விவசாயிகள் அறிவுமிக்கவர்கள். காலங்காலமாக அவர்கள் பயிர் செய்துவரும் தோட்ட நிலம் அல்லது வயல் அவர்களுக்கு ஒரு களப் பரிசோதனைச்சாலை.
அங்கு அவர்கள் பெற்றுக்கொண்ட அனுபவ அறிவின் மூலமும் அவர்களின் மூதாதையர்களிடமிருந்து தலைமுறை தலைமுறையாகத் திரட்டிய அறிவின் மூலமும் விவசாயிகளிடம் விவசாயம் பற்றிய போதிய ஞானம் இருக்கிறது.

நமது விவசாயிகளுக்கு எந்தப் பயிரை எந்த நிலத்தில் எந்தக் காலத்தில் நடவேண்டும் என்று தெரியும். எந்தப் பயிரை ஊடுபயிராக வளர்த்தால் பீடைகளைக் கட்டுப்படுத்தலாம் என்றும் தெரியும். கிழக்கிலிருந்து மேற்காக மின்னல் வெட்டினால் ஒரு மணித்தியாலத்திற்குள் மழை பெய்யும் என்று தெரியும். சந்திரனைச் சுற்றி சிறு வளையம் தோன்றினால் அடுத்த இரண்டு நாட்களில் இலேசான மழை வரும் என்று தெரியும்.

கிணற்றுக்குள் இருக்கும் தவளைகள் தொடர்ச்சியாக ஒலி எழுப்பினால் நீர்ப்பாசனத்துக்கு ஆயத்தம் செய்யவேண்டும் என்று தெரியும்.
சுதேசிய மருத்துவ அறிவைப் பயன்படுத்தி ஆங்கில மருந்துகள் கண்டுபிடிக்கப்படுவதைப் போன்றே, விவசாயிகளின் சுதேசிய அறிவை ஆதாரமாகக் கொண்டுதான் விவசாய விஞ்ஞானிகளும் கண்டுபிடிப்புகளை நிகழ்த்துகிறார்கள். 

இதனால்தான் இரண்டு தரப்பினரது அறிவையும் ஒப்பிட்டு எவருடையது கூட அல்லது குறைய என்று சொல்ல முடியாது என்று குறிப்பிட்டேன். அப்படி ஒப்பிட முடியும் என்று யாராவது சொன்னால், சில விடயங்களில் ஆராய்ச்சியாளர்களின் ஒரு சில வருட ஆய்வு அறிவைவிட விவசாயிகளின் பன்னெடுங்காலப் பட்டறிவு மேலானது என்றுதான் நான் சொல்லுவேன்.

ஆனால், விவசாயிகளும் ஆராய்ச்சியாளர்களும் தங்கள் அறிவை மேன்மேலும் வளர்த்துக்கொள்வதற்கு இரண்டு தரப்பினரும் தங்கள் கருத்துகளைப் பரிமாறிக்கொள்வது அவசியம். பழையன கழிதலும் புதியன புகுதலும் பரிணாம வளர்ச்சியில் தவிர்க்க முடியாதது. கால மாற்றங்களுக்கு ஒவ்வாத பழைய விவசாய முறைகளுக்கு மாற்றாகச் சர்வதேச அளவில் அறிமுகமாகும் விவசாய முறைகளை, புதிய தொழில்நுட்பங்களை நமது விவசாயிகள் ஆய்வாளர்களிடமிருந்து தெரிந்துகொள்ள வேண்டியுள்ளது.

பயிர்களில் புதிதாகத் தோன்றுகின்ற நோய்கள் பற்றியும் பீடைகள் பற்றியும் வயல்வெளிகளையே வாழ்வாகக் கொண்ட விவசாயிகளுக்கே முதலில் தெரியவருகிறது. இந்தத் தகவல்களைப் பெற ஆய்வாளர்கள் விவசாயிகளையே சார்ந்திருக்க வேண்டியுள்ளது. அந்த வகையில், பல்கலைக்கழக ஆய்வாளர்களும் விவசாயிகளும் பரஸ்பரம் ஒருவரது அறிவை மற்றவர் அங்கீகரித்து ஏற்றுக்கொண்டு தொடர்பாடலில் ஈடுபட வேண்டும். அறிவை ஜனநாயகமயப்படுத்தும் இந்த இருவழித் தொடர்பாடல் எப்போதாவது ஒருநாள் என்றில்லாமல் அவ்வப்போது தொடர்ச்சியாக நடைபெற வேண்டும். எமது விவசாயப் பொருளாதாரம் நிலையான வளர்ச்சி பெறுவதற்கு இது அவசியமாகும்' என்றார்.

யாழ். பல்கலைக்கழக விவசாய பீடாதிபதி கலாநிதி திருமதி சி.சிவச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர்  வசந்தி அரியரட்ணம், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுத் தலைவி  ஷக்னிக்கா ஹிரும்புரேகம, யாழ். பல்கலைக்கழக விவசாயபீடப் பேராசிரியர் கு.மிகுந்தன், வடமாகாண விவசாயப் பணிப்பாளர் சி.சிவகுமார், விவசாயிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--