2020 ஒக்டோபர் 25, ஞாயிற்றுக்கிழமை

வடமாகாண கல்வி அபிவிருத்தி மாநாடு

Super User   / 2014 ஏப்ரல் 22 , பி.ப. 08:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

வடமாகாண கல்வி அபிவிருத்தி மாநாடு கோண்டாவில் இராஜேஸ்வரி மண்டபத்தில் புதன்கிழமை (23), வியாழக்கிழமை (24) ஆகிய தினங்களில் நடைபெறவுள்ளதாக வடமாகாணக் கல்வி அமைச்சர் தம்பிராசா குருகுலராஜா வடமாகாண கல்வி அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் செவ்வாய்க்கிழமை (22) தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் கூறுகையில்,

வட மாகாணத்தில் வட மாகாண சபை ஆரம்பிக்கப்பட்ட பின்னர் முதலாவது கல்வி அபிவிருத்தி மாநாடு நடைபெறவுள்ளது. இக்கல்வி அபிவிருத்தி மாநாடு வரலாற்று ரீதியில் முக்கியமானதொன்றாகும்.

இக்கல்வி அபிவிருத்தி மாநாட்டில் கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன பிரதம விருந்தினராக கலந்து கொண்டு கல்வி அபிவிருத்தி மாநாட்டினை ஆரம்பித்து வைக்கவுள்ளதாகத் தெரிவித்தார்.

இவ் அபிவிருத்தி மாநாட்டில் இனங்காணப்பட்ட 10 பத்திரங்கள் முன்வைக்கப்படவுள்ளன. கல்வியலாளர்கள் 10 குழுக்களாக கடந்த 6 மாதங்களாக ஆராய்ந்து இந்த பத்திரங்களின் அறிக்கைகளை முன்வைத்துள்ளார்கள்.

அதில் மாணவர்களினதும், ஆசிரியர்களின் உள நன்னிலை திட்டமிடல் தரவுத்தளம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
 
இருநாள் செயலமர்வின் போது குழுநிலையில் கண்டறியப்படும் விடயங்களின் தொகுப்பு, மே அல்லது ஜீன் மாதத்தின் இறுதியில் புத்தக வடிவமாக வெளியிடப்படவுள்ளது.
 
வடமாகாணத்தில் கடந்த 200 வருடங்களுக்கு மேலாக இருக்கும் பாடசாலைக் கல்வி பாரம்பரியத்தின் முக்கியமான கட்டமாக இந்தச் செயலமர்வு அமையப்பெற்றுள்ளது.
 
வட மாகாண சபையின் பின்னர் முதலாவது கல்வி அபிவிருத்தி செயலமர்வாக இச்செயலமர்வு அமைகின்றது.
 
வட மாகாணத்தில் நிகழும் கல்விப் பிரச்சினைகள், மாணவர்களை எவ்வாறு வழி நடத்திச் செல்ல வேண்டும், கல்விச் சமூகத்தினை எவ்வாறு மதிக்க வேண்டும், எமது வளங்களை எவ்வாறு பயன்படுத்த வேண்டும், எமது மாணவர்களுக்கு எவ்வாறான கல்வியினை வழங்கலாம். இந்த உலகத்தில் எவ்வாறான உச்ச கட்டத்தினை அடையலாம் என்பவற்றினை அடையாளப்படுத்தும் விதமாக இந்த செயலமர்வு நடைபெறவுள்ளது.
 
இதனடிப்படையில் வருங்காலத்தில் 5 ஆண்டு கல்வித்திட்டத்தினை ஆரம்பித்து எமது செயற்பாடுகளை செய்யலாம் என எண்ணியிருக்கின்றோம்.
 
இக்கல்வி அபிவிருத்தி செயலமர்வில் வெளிநாட்டு கல்வியாளர்கள் 7 பேரை அழைப்பதாக கூறியிருந்த நிலையில், மத்திய கல்வி அமைச்சினால், மாகாண கல்வி அமைச்சும் மத்திய கல்வி அமைச்சும் இணைந்து இச்செயலமர்வினை நடாத்துவதாக கூறியிருந்த படியால் 7 வெளிநாட்டவர்களையும் நிறுத்தி விட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
 
அந்தவகையில், வடமாகாணத்தின் சமகால கல்வி செயற்பாட்டினை தென்பகுதிக்கும் எடுத்துக்கூற வேண்டும் என்பதற்காக, இக்கல்வி செயற்பாட்டினை வட பகுதியின் எதிர்கால கல்வி நிலையினை உயர்த்தும் நோக்கத்துடனும் அமைக்கப்பட்டுள்ளது.
 
இக்கல்வி மாநாட்டில் வடமாகாணத்தில் உள்ள 12 கல்வி வலயத்திலுமிருந்து 24 மாணவர்கள், 12 பெற்றோர்கள் 48 அதிபர்கள், மற்றும் 40 ஆசிரியர்கள் உட்பட 320 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் வடமாகாண கல்வி அமைச்சர் கூறினார்.
 
இக்கல்வி அபிவிருத்தி மாநாட்டில், வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி மற்றும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உள்ளிட்ட பலரும் கலந்துகொள்ளவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--